வேலூரில் ஏ.சி.சண்முகம் போட்டி... பாஜக கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதி?

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்
Updated on
2 min read

வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகம் போட்டியிடுவார் என்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில்  பாஜக கூட்டணியில் எந்தெந்த தொகுதியில் யார், யார்  போட்டியிடுவார்கள் என்ற யூகங்கள்  வெளியாகியுள்ளன.

அண்ணாமலை
அண்ணாமலை

வேலூர் மாவட்டம், அணைக்கட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  நடைபயணம் மேற்கொண்டபோது, "வேலூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு தோற்றவர் ஏ.சி.சண்முகம். அவர் தோற்றாலும் இந்த தொகுதி மக்களுக்காக பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். இலவச மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துவதுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 

வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் நம்முடைய பிரதமர் மோடியின் ஆணைக்கிணங்க இந்த தொகுதியில் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பாரிவேந்தர்
பாரிவேந்தர்

யாருடன் கூட்டணி என்பதே இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை,  தலைமை அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஆனாலும்,  இது தலைமையின் உறுதியான  முடிவு என்பதால் தான் அண்ணாமலை இப்படி வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாஜக மற்றும்  அதன் கூட்டணியின் உள்ளவர்கள் எந்தந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்ற யூகப் பட்டியலும் வெளியாகியுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில் இருக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்றும், தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

எல்.முருகன்
எல்.முருகன்

பாஜகவைப் பொறுத்தவரை தற்போது மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. கோவையில் கமல்ஹாசன் போட்டியிட்டால் அங்கு வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பளிக்கக் கூடும் என்கிறார்கள்.  பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கு, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், விருதுநகரில் தமிழிசை சவுந்தரராஜன், நெல்லையில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதே போல ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மீண்டும் தேனி தொகுதி வழங்கப்படும்  என சொல்கிறார்கள். அமமுகவுக்கு ஐந்து முதல் 10 இடங்கள் வரை ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in