வெள்ளலூர் பேரூராட்சியை கைப்பற்றியது அதிமுக!

வெள்ளலூர் பேரூராட்சியை
 கைப்பற்றியது  அதிமுக!

கோவை மாவட்டம், வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றிற்கு நடைபெற்ற தேர்தலில் 8 வார்டுகளை அதிமுகவும், 7 வார்டுகளைத் திமுகவும் கைப்பற்றின. இதையடுத்து மார்ச் 4-ம் தேதி தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதனால் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாகக் காணப்பட்டது.

அப்போது, காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறிய திமுகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது. இதில் திமுகவினர் சிலர் காயமடைந்தனர். இதனால் அதிமுகவினரின் வாகனங்கள் மீது திமுகவினர் கற்களை வீசினர். இதில் அதிமுகவைச் சேர்ந்த மருதாசலத்தின் வாகனம் சேதம் அடைந்தது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆத்திரமடைந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் வாக்குச்சீட்டுகளைக் கிழித்து எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் 8 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்த நிலையில் தேர்தல் நடத்தப்பட்டது. வெள்ளலூர் பேரூராட்சித் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மருதாசலமும், துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கணேசனும் தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளைத் திமுகவும், ஒரு பேரூராட்சியை சுயேச்சையும் கைப்பற்றியிருந்த நிலையில், வெள்ளலூர் பேரூராட்சியை கடும் நெருக்கடிக்கு மத்தியில் அதிமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in