அமர்ந்திருந்த புன்னகை புகழ் வேலம்மாள் பாட்டி... குனிந்தபடி நின்று பேசிய முதல்வர்!

நாகர்கோவிலை நெகிழச் செய்த மு.க.ஸ்டாலின்
அமர்ந்திருந்த புன்னகை புகழ் வேலம்மாள் பாட்டி... குனிந்தபடி நின்று பேசிய முதல்வர்!
வேலம்மாள் பாட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆய்வுப் பணிக்காக வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை தனக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டதற்காக புன்னகை புகழ் வேலம்மாள் பாட்டி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

குமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. கரோனா நேரத்தில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணமாக வழங்கியது. அதை முகம் ததும்ப புன்னகையுடன் வாங்கிச் சென்ற வேலம்மாள் பாட்டியை, நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி புகைப்படம் எடுத்திருந்தார். இந்தப்படம் பெரிய அளவில் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்தப்படத்தை ‘இந்த சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு’ என்னும் பெயரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தன் சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு திட்டங்களிலும் விளப்படப் படங்களில் வேலம்மாள் பாட்டியின் புன்னகை ததும்பும் முகமும் இடம்பெற்றது. இந்நிலையில் வேலம்மாள் பாட்டி அடிப்படையில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர். அவரை முறையாகக் கவனித்துக்கொள்ளவும் யாரும் இல்லை என்பது புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பியின் மூலம் அரசின் கவனத்திற்கு வந்தது.

இதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினரின் பரிசீலனைக்குப் பின்பு குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், கடந்த மாதம் வேலம்மாள் பாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இதற்குக் காரணமான முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குமரி மாவட்டம் வந்தபோது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார் வேலம்மாள் பாட்டி. அதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு மாவட்ட அமைச்சர் மனோதங்கராஜூம் அறிவுறுத்தியிருந்தார்.

இன்று நன்றி தெரிவிக்க வந்திருந்த, வேலம்மாள் பாட்டியின் வயோதிகத்தைக் கணக்கில் கொண்டு அவருக்கு இருக்கை வசதி அமைக்கப்பட்டிருந்தது. அவர் வயோதிகத்தால் அமர்ந்திருக்க, நின்றபடியே முதல்வர் மு.க.ஸ்டாலின் தானே குனிந்து, அவரிடம் பேசியது அங்கிருந்த தொண்டர்களுக்கும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in