
லக்கிம்பூர் கெரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற வழக்கில் கைதான ஆசிஷ் மிஸ்ரா, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைக் கடுமையாக எதிர்த்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது உத்தர பிரதேச அரசு.
2022 ஜனவரி 3-ல் நடந்த இந்தச் சம்பவத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆசிஷ் மிஸ்ரா சம்பந்தப்பட்டிருப்பதாக விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜனவரி 9-ல் ஆசிஷ் மிஸ்ரா கைதுசெய்யப்பட்டார். எனினும், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், பிப்ரவரி 10-ல் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை, பாஜக தலைமையிலான உத்தர பிரதேச அரசு எதிர்க்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த வழக்கு தொடர்பான சாட்சி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், அதைச் சொல்லி அவரைத் தாக்கியவர்கள் அவரை மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்துசெய்யக் கோரி, உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரிய காந்த், ஹிமா கோலி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவிருக்கிறது.
முன்னதாக, ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ஏன் ரத்துசெய்யக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு அவருக்கும், உத்தர பிரதேச அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வழக்கின் சாட்சி தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்தும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. இவ்வழக்கின் சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுவைக் கடுமையாக எதிர்த்ததாக உத்தர பிரதேச அரசு தெரிவித்திருக்கிறது.
அத்துடன், சாட்சி தாக்கப்பட்டதற்குத் தனிப்பட்ட பகைதான் காரணம் என்றும் உத்தர பிரதேச அரசு விளக்கமளித்திருக்கிறது. ஹோலி பண்டிகையின்போது வண்ணங்களை வீசுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே சாட்சி தாக்கப்பட்டதாகவும், சாட்சிகள் அனைவருக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும் உத்தர பிரதேச அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.