
தன்மீது அவதூறு பரப்பியதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.2 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி, சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி போலீஸில் புகார் அளித்தார்.
அப்போது தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி, நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து சீமானை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் கடந்த 16ம் தேதி நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டி வந்தால் நாம் தமிழர் கட்சியால் வட தமிழகத்தில் கால் வைக்க முடியாது என்றும் சீமானுக்கு சவால் விடுத்தார் வீரலட்சுமி. இதைத் தொடர்ந்து வீரலட்சுமி மீது சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில் தன் மீதான அவதூறு பேச்சுக்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.