திமுக தவறுசெய்தாலும் தட்டிக்கேட்கத் தயங்கமாட்டோம்!

- விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி
எஸ்.எஸ்.பாலாஜி
எஸ்.எஸ்.பாலாஜி

சனாதனத்திற்கு எதிராக ஒரு லட்சம் மனுஸ்மிருதி பிரதிகளைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விசிக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம்.

சனாதனத்திற்கு எதிராக விசிக சார்பில் ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் கொடுக்க இருப்பதாக உங்கள் தலைவர் அறிவித்திருக்கிறாரே?

ஆம், விசிக சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி பிரதிகளைக் கொடுக்க உள்ளோம். மாவட்ட வாரியாக மாவட்டப் பொறுப்பில் உள்ளவர்கள் தலைமையில் இந்த விநியோகம் நடக்கும்.  வணிக வளாகம், கல்லூரிகள், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநியோகம் செய்ய இருக்கிறோம்.

உங்களுக்குப் போட்டியாக புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அரசியல் அமைப்புச் சட்ட பிரதிகளைக் கொடுக்கப் போவதாகச் சொல்கிறாரே?

நான் சாலையில் போகும் போது, ஓரத்தில் நின்று கொண்டு எதையாவது செய்தால் எங்களை எதிர்ப்பது ஆகாது. ஏதாவது பரபரப்பைக் கிளப்ப வேண்டும் எனச் சிலர் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. எங்களது எதிரி சனாதனம்தான்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த விடாப்பிடியாக எதிர்ப்பு கிளப்பி வருகிறீர்களே... உங்களுக்கு இருக்கும் அதே உரிமை அவர்களுக்கும் இருக்கு தானே?

எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர்  என அத்தனை பேரையும் நான் சொல்கிறேன். அதுபோல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ளவர்களின் பெயர் பட்டியலை அவர்கள் தெரிவிக்க வேண்டும். அதை இயக்கம் என்று சொல்வதைவிட கொள்கை ரீதியாக இருப்பவர்களை இணைத்த ஒரு அமைப்பு என்று சொல்லலாம். சனாதன் சன்ஸ்தான் என்ற அமைப்புதான் கல்புர்கியை சுட்டுக்கொன்ற இயக்கம். இது ஆர்எஸ்எஸ்ஸின் ஒரு பிரிவுதான். காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ் இல்லை என்பார்கள். ஆனால், கோட்சேவுக்கு மாலை போடுவார்கள். பாஜக மீது கருத்தியல் ரீதியாக விசிக மாறுபட்டு இருக்கிறது. ஆனாலும் பாஜக பேரணி நடத்துவதில் எவ்விதமான எதிர்ப்பும் எங்களுக்கு கிடையாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கட்சி பாஜக. மக்களைச் சந்திக்கக் கூடிய நிலை அவர்களுக்கு இருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. பயங்கரவாதத்தில் அவர்களால் நேரடியாக ஈடுபட முடியாது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பாலான ரவுடிகள் அடைக்கலம் புகுந்திருப்பது பாஜகவில்தான். இந்த ரவுடிகளை வைத்துக் கொண்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். பாஜகவினர் மூன்றாவது முறையாக மீண்டும் மத்தியில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறார்கள். 2019-ல் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றம் பிறமாநிலங்களிலும் தொடரும் என நினைக்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் இது மாதிரியான ஊர்வலங்களை முன்னெடுக்கிறார்கள்.

தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்துகிறீர்கள். ஆளுநரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

 ஆளுநரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், இவரைவிடக் கொஞ்சம் சிறந்த ஆளுநர் கிடைக்கலாம். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி உறுதிமொழி எடுத்துவிட்டு அதற்கு நேர் எதிரான சனாதனத்தை பேசுகிறார் ஆளுநர். மாநில உரிமைகளில் தலையிடுகிறார்; தனிமனிதராக அவரின் விருப்பு வெறுப்புகளை பயன்படுத்துகிறார். ஆளுநரே வேண்டாம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. ரவியை ஆளுநராக அறிவித்த அடுத்த நிமிடமே அதற்கு தொல்.திருமாவளவன் அவர்கள் கண்டனம் தெரிவித்தார். அவர் சொன்னது போலத்தான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பிறகு அக்கட்சி வளர்ந்திருப்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

 ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. பேரூராட்சி, ஊராட்சிகளிலேயே 100 வாக்குகள் கூட வாங்க முடியாத ஒரு கட்சி, தாங்கள் வளர்ந்து விட்டதாக சொல்லமுடியாது. அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு திரட்டிவரப்பட்டவர்கள் காசு கொடுக்காமல் தங்களை ஏமாற்றிவிட்டதாகச் சொல்கிறார்கள். அண்ணாமலைக்கு ஏற்கெனவே கிரிமினல்களோடு நல்ல தொடர்பு இருந்திருக்கிறது. அதனால் அவர் கிரிமினல்களை கட்சியில் இணைத்து வைத்துள்ளார்.

திமுக அரசின் மீது அண்ணாமலை தொடர்ந்து ஊழல் குற்றச் சாட்டுகளைச் சொல்லிவருகிறாரே?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது அண்ணாமலை புகார் சொன்னார். அதற்கான விளக்கத்தை அமைச்சர் கொடுத்துவிட்டார். சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற அண்ணாமலையின் அரசியல் கனவைச் செந்தில் பாலாஜி தகர்த்துவிட்டார்.  கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பாக செந்தில் பாலாஜியை நியமித்ததும் அவர்மீது இன்னும் அதிக கோபம் ஏற்பட்டிருக்கிறது. அண்ணாமலைக்கு முன்பு இருந்தவர்கள் எல்லாம் அந்த கட்சியில் உழைத்து மேலே வந்தவர்கள். கரையான் புற்றில் புகுந்த கருநாகம் போல அண்ணாமலை இப்போது பாஜகவில் புகுந்துள்ளார்.

பாஜகவில் இருப்பவர்களை இவர் திட்டமிட்டு காலி செய்துவிட்டு அரசியல் செய்கிறார். ஆனால், அண்ணாமலை ஒரு போதும் தலைமைக்குத் தகுதியில்லாதவர். கட்சிக்கு வேண்டுமானால் அவர் தலைவராக இருக்கலாம். ஒருபோதும் மக்கள் தலைவராக வரமுடியாது. 

அண்ணாமலை, ஆளுநர் ரவி இவர்களில் யார் ஆபத்தானவர்கள் என நினைக்கிறீர்கள்?

 இருவருமே விஷம்தான். வகையும், குணமும் தான் வேறு.

டாஸ்மாக், மின் கட்டண உயர்வு போன்றவற்றில் விசிக நிலைப்பாடு என்ன?

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு. ஒரு அரசு வந்தவுடன் உடனே அதைச் செய்துவிட வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. மின்கட்டண உயர்வைப் பொறுத்தவரை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உயர்த்துகிறது. கட்டணம் உயர்வது ஒருபக்கம் என்றால், தனிமனிதனின் வருவாயைப் பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது இந்தப் பிரச்சினையைச் சமன்செய்துவிடும். ஆனாலும், மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யும்படி மின்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறோம்.

திமுக ஆட்சியில் விசிகவுக்கு திருப்தி உள்ளதா?

திருப்தியாகவே இருக்கிறோம். ஆனால், இன்னும் சில இடங்களில் அவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என நினைக்கிறோம். எங்களின் தேவைகளின் அடிப்படையில் சிலவற்றை நாங்கள் முதல்வரிடம் தெரிவிக்கிறோம். ஆளுநரைப் போல அரசு அலுவலகங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த  பலர் இருந்து வருகிறார்கள். அரசின் திட்டங்களை மக்களுக்குச் செல்லாமல் அவர்கள் தடுக்கிறார்கள். இதில் திமுக அரசு கூடுதல் கவனம் செலுத்தி அவர்களை அடையாளப்படுத்த வேண்டும்.

திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் பேசுவதில் ஒரு சில பகுதியை மட்டும் வெளியிட்டால் அது எந்த மாதிரியான தோற்றத்தை எனக்குக் கொடுக்கும் எனத் தெரியாது. அமைச்சர் பொன்முடி மக்களிடம் பேசும்போது, நீங்கள் இப்போது எந்த பேருந்தில் போகிறீர்கள் எனக் கேட்கிறார். அப்போது சிலர் ஃப்ரீ பஸ் என்கிறார்கள்; சிலர் இலவச பேருந்து என்கிறார்கள்; சிலர் ஓசி பஸ் என்கிறார்கள். மக்கள் இயல்பான முறையில் வழக்குச் சொல்லாகச் சொன்னதைத்தான் அமைச்சரும் சொல்லி இருக்கிறார். அதற்கு அவர் வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

அதுபோல் நீங்க எஸ்சிதானே எனச் சொன்னது தவறுதான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அமைச்சருக்கு அப்படிச் சொன்னதில் உள்நோக்கம் கிடையாது என நாங்கள் அவரிடம் பேசும்போது தெளிவுபடுத்திவிட்டார். அதே நிலைப்பாட்டில் அவர் இருந்திருந்தால் நாங்கள் எதிர்ப்போம். எச்.ராஜா திமுகவில் இருந்த குஷ்புவைப் பற்றிப் பேசிய அதே நிலைப்பாட்டில்தான் இன்னமும் இருக்கிறார். குஷ்பு பாஜகவில் சேர்ந்த பிறகு கூட ராஜா தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கு இன்றும் வருத்தம் தெரிவிக்கவில்லை. எஸ்.வி.சேகர், வி.பி.துரைசாமி போன்றவர்கள் பேச்சை அவர்கள் கண்டிப்பது கூட கிடையாது. ஒருவர் பேசும் சூழலைக் கருத்தில் கொண்டு எங்களின் நிலைப்பாடு இருக்கும். திமுகவோடு கூட்டணியில் இருக்கிறோம்; நல்ல நட்புறவுடன் இருக்கிறோம் என்றெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். திமுக தவறு செய்தாலும் தட்டிக்கேட்கத் தயங்க மாட்டோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in