நாளை மதுரையில் மலைச்சாமி மணிமண்டபத் திறப்பு விழா!

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்கிறார்
நாளை மதுரையில் மலைச்சாமி மணிமண்டபத் திறப்பு விழா!
மலைச்சாமி

“செப்டம்பர் 14 (நாளை) மாவீரன் மலைச்சாமி அவர்களின் நினைவுநாள். மதுரை அவனியாபுரத்தில் அவரது நினைவாக விசிக சார்பில் கட்டப்பட்டுவரும் மணிமண்டபத்தினை நாளை நான் திறந்து வைக்கவிருக்கிறேன். மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

யார் இந்த மலைச்சாமி? என்று இன்றைய தலைமுறையினருக்கு கேள்வி எழலாம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாய் அமைப்பான, பாரதீய தலித் பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளராக இருந்தவர் தான் வழக்கறிஞர் மலைச்சாமி.

மதுரை அவனியாபுரம் பெரியார் நகரில் அழகப்பன் இருளாயி தம்பதியருக்கு 1954-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிறந்த இவர், மதுரை வக்போர்டு கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். பிறகு சட்டம் படித்து, வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். 1983-ல் திக தலைவர் வீரமணி தலைமையில், சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே சமுதாய ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்த மலைச்சாமி, அப்போதே சக மாணவர்களுடன் இணைந்து தான் வாழும் பகுதிக்கு தந்தை பெரியார் நகர் என்ற பெயரை வைக்கப் பாடுபட்டவர். இளமைப் பருவத்தில் தந்தை பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த அவர், பிற்காலத்தில் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பின்பற்றி, தலித் மக்களின் விடுதலையில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கல்லூரியில் படிக்கும்போதே அனைத்துக் கல்லூரி மாணவர்களோடு இணைந்து, பட்டியலின மலைவாழ் மாணவர் அமைப்பினை ஏற்படுத்தி, பட்டியலின மாணவர்களின் பிரச்சினைகளை வெளியுலகிற்கு எடுத்துரைத்தார். மாணவர்கள் தங்கள் பிரச்சினைக்காக மட்டும் போராடாமல், சமுதாயப் பிரச்சினைகளுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.

தன்னுடைய மாணவப் பருவத்தில் இவர் நடத்திய பேரணி ஒன்றே இவரது ஆளுமையை பொதுசமூகத்திற்கு அறிமுகப்படுதியது. மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி கிராமத்தில் சாதி இந்துக்கள் வாழும் பகுதியில் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்கள் தண்ணீர் எடுத்தார்கள் என்ற காரணத்தைச் சொல்லி காட்டு ராசா என்னும் பட்டியலின இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்தும், கொலை செய்யப்பட்ட காட்டு ராசாவுக்கு நீதி கோரியும் மலைச்சாமி, 14.2.1983 அன்று மதுரையில் நடத்திய பேரணியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள். கட்டபொம்மன் சிலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் நடந்த இந்தப் பேரணி, பட்டியலின மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான மைல் கல்லாக அமைந்தது. அதுவும் முழுக்க முழுக்க மாணவர்களைத் திரட்டியே இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்தார் மலைச்சாமி.

ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர் அமைப்பு என்ற பெயரில் செயலாற்றி வந்த மலைச்சாமி, 19.9.1983-ல் அம்பேத்கர் அவர்களின் துணைவியார் திருமதி சவீதா அம்பேத்கர் தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் சுமார் பத்தாயிரம் பேர் முன்னிலையில் பாரதீய தலித் பேந்தர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு அந்த அமைப்பிற்கு தமிழக அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். கரும் சிறுத்தைகள் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட தலித் பேந்தர் அமைப்பின் தலைவராக சுறுசுறுப்பாக இயங்கினார் மலைச்சாமி.

அந்த கால கட்டத்தில் அவர் நடத்திய போராட்டங்களில், வஞ்சி நகரம் ஆதிதிராவிட இளைஞர் கந்தன் படுகொலையைக் கண்டித்து நடத்திய போராட்டம், மதுரையில் செருப்பு தைக்கும் தொழிலாளி பாக்கியம் கொலையை கண்டித்து நடத்திய போராட்டம் போன்றவை முக்கியமானவை. மதுரை தெற்கு தாலுகா பெருங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட பட்டா நிலத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து நடத்திய போராட்டத்தில், தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளாமல், சிறுவிவசாயிகள் நல சங்கம், பாரதி தேசிய பேரவை, அம்பேத்கர் மக்கள் இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழக மக்கள் முன்னணி, கிராமிய இறையியல் நிறுவனம் ஆகிய இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டு போராடி, பெருங்குடி மக்களுக்கு அந்த நிலத்தை பெற்றுத் தந்தார். இதனால் இன்றும் பெருங்குடி மக்கள், அவரை நினைவுகூர்கின்றனர்.

தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் சார்பாகவும் போராடியவர் மலைச்சாமி. இந்திய அளவில் பட்டியலின மக்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராகவும், அதற்கான முயற்சிகளில் தளராமல் ஈடுபடுவராகவும் இருந்து வந்தார் மலைச்சாமி. அம்பேத்கருக்கு மதுரை மாநகரில் முதலில் சிலை அமைத்த பெருமை இவரையே சாரும். கல்வியே சமூக விடுதலைக்கு அடிப்படை என்பதைப் புரிந்திருந்தமையால், டாக்டர் அம்பேத்கர் கல்வி கழகத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர் அவர்.

ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாத பட்டியலின மக்கள், உழைத்திடவே ஒரு வேலை இல்லாத மக்கள், குடிசைகளிலும், வீதியோரத்திலும் வாழ்கிற மக்கள், தினந்தோறும் கொல்லப்படுகின்ற மக்களின் விடுதலைக்காக முழு மூச்சாக ஈடுபட்டு, பட்டியலின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மலைச்சாமி, 14.9.1989 அன்று திடீரென இயற்கை எய்தினார்.

மலைச்சாமி படத்தின் முன் முழக்கமிடும் தொல்.திருமாவளவன்
மலைச்சாமி படத்தின் முன் முழக்கமிடும் தொல்.திருமாவளவன்

போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி

மலைச்சாமி நடத்திய டாக்டர் அம்பேத்கர் கல்விக்கழகமானது தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்பது, அம்மக்களுக்கு எளிதில் கல்வி கிடைக்கச் செய்து கல்வி கற்கத் தூண்டுவது, வேலைக்காக மனு செய்யும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி கொடுப்பது போன்ற நோக்கங்களுக்காக நடத்தப்பட்டது. இப்போது அவரது நினைவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை அவனியாபுரத்தில், கட்டியுள்ள மணிமண்டபத்தின் முதல் தளமானது இப்பணியைச் செய்யும் வகையில், திட்டமிட்டு கட்டப்பட்டு வருவதாக விசிகவினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.