
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக மற்றும் பாஜகவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பாஜகவினர் மற்றும் காவலருக்கு மண்டை உடைந்தது.
அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலையிட்டு மரியாதை செலுத்தினர். விசிக தலைவர் வருகையையொட்டி தொண்டர்கள் சிலைக்கு அருகே உள்ள கம்பத்தில் அவர்களது கொடி கட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
திருமாவளவன் மாலையிட்டு சென்ற பின்பு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையிட வருகை புரிவதை ஒட்டி, பாஜக தொண்டர்கள் கம்பத்தில் கட்டி இருந்த விசிக கொடியை அகற்றிவிட்டு பாஜக கொடியை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விசிக மற்றும் பாஜக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த தொண்டர்கள் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பாஜகவை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், செந்தில் உட்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மோதலை தடுக்க முயன்றபோது தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் காவலர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதனால் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே 50 மேற்பட்ட பாஜக தொண்டர்கள் விசிகவினரை கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.