‘5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்’

முதல்வர் - ஆளுநர் உரசலில் கலக்கும் வாரிசு, துணிவு அலப்பறைகள்
‘5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்’

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாகவும், திமுக ஆட்சிக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் புதிய ட்ரெண்டிங் ‘5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்’!

விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் பஞ்ச வசனமான இதற்கு எதிராக, பாஜக எதிர்ப்பாளர்கள் துணிவு திரைப்படக் காட்சியை கையிலெடுத்திருப்பது இன்னொரு சுவாரசியம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீப்பொறி பறந்த ஆளுநர் - முதல்வர் இடையிலான உரசல் நிகழ்ந்து 2 நாளாகிறது. ஆனாலும் சூடு குறைந்தபாடில்லை. அன்றைய தினம் திமுக ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே பொதுவெளியில் அலையடித்தது.

’தமிழ்நாடு’ என்ற உணர்வுபூர்வமான அஸ்திரம் திமுகவினர் கையில் இருந்ததே இதற்குக் காரணம். இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் தொடங்கி ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பிய பாஜகவினர் வரை அடக்கியே வாசித்தனர். சற்று இடைவெளிக்குப் பின்னர் தங்களது தரப்பு வாதங்களோடு தற்போது அடித்தாட தொடங்கி இருக்கின்றனர்.

வழக்கமான திமுக எதிர்ப்பு சாடல்கள், முந்தைய ஆட்சிக்கால சீர்கேடுகள், தற்போதைய ஆட்சிக்கான புகார்கள் ஆகியவை பாஜக ஆதரவாளர்களின் தரப்பிலிருந்து வீசப்பட்டு வருகின்றன. இவற்றோடு புதிதாய் ‘5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்’ என்ற முழக்கத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யும் என்ற மிரட்டல் இதனுள் ஒளிந்திருக்கிறது. திமுக முந்தைய ஆட்சிகளின்போது எதிர்கொண்ட ஆட்சிக்கலைப்பு புராணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வாரிசு திரைப்படத்தில் இடம்பெறும் இந்த பஞ்ச் வசனத்தை பாஜகவினர் பரப்ப, அதற்கு எதிரானவர்கள் துணிவு திரைப்படத்தை துணை கொண்டிருக்கிறார்கள்.

துணிவு திரைப்படத்தில், வட இந்தியாவின் கமாண்டோ தளபதியிடம் தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனி பேசும் ”ரவிந்தர் இது தமிழ்நாடு. இங்க வந்து உன் வேலையெல்லாம் காட்டாத..” என்ற வசனத்தை ஒருசிலர் பரப்பி வருகிறார்கள். ரவிந்தர் என்பதில் உள்ள ’ரவி’, ஆளுநரை குறிக்கிறதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in