54 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் திமுக: திடீரென வானதி சீனிவாசன் கொந்தளிக்க காரணம்?

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

தொடர்ந்து 54 ஆண்டுகளாக ஒரு அரசியல்  கட்சி,  ஒரே குடும்பத்தின் பிடியில் இருக்கிறது என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினருமான  வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள ஸ்டாலினின் மகனுமான  உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை திமுகவுக்கு மட்டும்தான்.

முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதால்தான் இப்படி குறுகிய காலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. திமுகவில் நடக்கும் இந்த வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால், திமுகவில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருக்கிறதா? பாஜகவில் இல்லையா? ராஜ்நாத் சிங், எடியூரப்பா, வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பாஜக தலைவரின் மகன்கள் எம்.பி., எம்எல்ஏக்களாக இல்லையா? என திமுகவினர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

இந்த கேள்வியில் எந்த நியாயமும் இல்லை. குடும்பத்தில் தந்தையோ, தாயோ அரசியலில் இருந்தால், அவர்களது வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என்றில்லை. நம் இந்தியா ஜனநாயக நாடு. 18 வயது பூர்த்தி அடைந்த, வாக்களிக்கும் தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரலாம். அதில் எந்த தவறும் இல்லை. பாஜகவும் அதனைத் தவறென சொல்லவில்லை.

ஆனால், வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது. பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் தலைவராக வருவதுதான் வாரிசு அரசியல். காங்கிரஸில் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன் ராஜிவ், அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல், இப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா என ஒரு குடும்பமே கட்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்.

வேறு ஒருவர் கட்சித் தலைவராக இருந்தாலும், காங்கிரஸை நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வழிநடத்துகிறார்கள். மற்றவர்கள் கட்சிக்காக எவ்வளவு உழைத்திருந்தாலும், எவ்வளவு திறமை மிக்கவர்களாக இருந்தாலும், காங்கிரஸை வழிநடத்தும் தலைமை பொறுப்புக்கு வரவே முடியாது. வருவதை நினைத்து பார்க்கக்கூட முடியாது.

இதுபோன்ற நிலைதான் திமுகவிலும் உள்ளது. 49 ஆண்டுகள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும், அவருக்கு இணையாக கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும், ஸ்டாலினால்தான் தலைவராக முடிந்தது. இதற்கு காரணம் கருணாநிதியின் மகன் என்பதுதானே? இதுதான் வாரிசு அரசியல். இது பெரும் சமூக அநீதி. அதனைத்தான் பாஜக எதிர்க்கிறது.

ஸ்டாலின் திமுக தலைவரானதும், அவர் வகித்த இளைஞரணி தலைவர் பதவி, மகன் உதயநிதிக்கு வந்துவிட்டது. நான்கு முறை, மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கும், திறமையான பலர் இருந்தும், எம்எல்ஏவாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகி விட்டார். இந்த சமூக அநீதியைதான், வாரிசு அரசியல் என்று பாஜக எதிர்க்கிறது.

பாஜகவில் தலைமை பொறுப்புக்கு, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருவது கிடையாது. தேசிய தலைமை மட்டுமல்ல, எந்தவொரு மாநில தலைமையிலும் வாரிசுகள் இல்லை. இதனை எப்படி வாரிசு அரசியல் என்று சொல்ல முடியும்?

மகனை அமைச்சராக்கியதற்கு பதில்  பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஸ்டாலின்  துணை முதல்வராக்கியிருக்கலாம். அல்லது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில், வருவாய் போன்ற முக்கிய துறைகளைக் கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் திமுக அரசை சமூக நீதி அரசு என பாராட்டலாம்.

இனியாவது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கிய துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். சமூக நீதி, சமத்துவம் என்பதை பேச்சில் மட்டுமல்லாது, செயலிலும் காட்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in