ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர இதைச் செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன் அட்வைஸ்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர இதைச் செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன் அட்வைஸ்

தேசிய அரசியலுக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது, தேசிய தலைவர்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு  வானதி  சீனிவாசன் எம்எல்ஏ   அறிவுரை கூறியுள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "வடமாநிலத்தவர்களுக்கு ஹோலி பண்டிகையும் முக்கியமான பண்டிகை.  அதற்குச் செல்வோரும் சென்று வரும் நிலையில் அவர்களது இல்லங்களில், இங்கு பரப்பப்படும்  வீடியோ குறித்தான கருத்துக்கள் சென்றதால் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. 

முதலமைச்சரின் அமைச்சரவையை சார்ந்தவர்களே பல்வேறு சமயங்களில் வடமாநில தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் செய்கிற வேலைகள் பற்றியும் கேவலமாக  நடந்து கொண்டுள்ளனர். இதை அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டியது முதலமைச்சர்தான். இதனை அவர் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், இது போன்ற சூழல் தற்போது வந்திருக்காது. 

மேலும் மாநில அரசு இந்த பகுதிகளைப் பழி வாங்குகின்ற நோக்கத்தில் செயல்படுகிறது. இந்த பகுதியில் உள்ளவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பிரச்சினையினாலும் பாதிக்கப்படட்டும் என விட்டு விட்டார்களா என சந்தேகம் எழுகிறது.

முதலமைச்சர் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுகின்ற வகையில் உணர்கிறார் என்றால் இந்த பிரச்சினைக்கு மூல காரணம் யார்? இதற்கு முன் பத்து ஆண்டுகள் இது போன்ற நடந்ததா? இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு சமூக ஊடகங்களிலும், இவர்களது அமைச்சர்கள் வட மாநில தொழிலாளர்களைக் குறிப்பிட்டு பானி பூரி விற்றும்,  இந்தி பேசினாலும்  வேலை கிடைக்குமா எனத் தெரிவித்து வருகிறார்கள்.

சிலர் பல்வேறு கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.  வடமாநில தொழிலாளர்கள் வருவதால்தான் தமிழ் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என வெறுப்புணர்வு பிரச்சாரத்தை தூண்டுபவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு பிரச்சினை வந்தபிறகு தனது ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது என கூற முடியாது.  இதனை உருவாக்கியது நீங்கள் தான்.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர்  கூறுகிறார்  அதில் அவர்  உறுதியாக இருக்க வேண்டும். வட மாநிலங்களில் இருந்து  வருபவர்களும் இந்தியர்கள்  தான். இந்தியர்களைப் பற்றி மாநில அமைச்சர்கள் பேசுவதை முதல்வர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு அடுத்தவர்  மீது பழி போடுகிறார்.  இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதும், உறுதிப்பாட்டை காட்ட வேண்டியதும் முதலமைச்சர்தான்.

அவர் தேசிய அரசியலுக்கு செல்வதாக கூறிவரும் நிலையில் தேசிய அரசியலில்  ஏ டீம், பி டீம் என பல்வேறு டீம்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே, தேசிய அரசியலுக்குச் செல்வதாக கூறினால் மட்டும் போதாது. தேசிய அரசியலில் இருக்கக்கூடிய தலைவர்கள் இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் அதற்கு அடிப்படையாக முதலில் தேசியத்தை நீங்கள் நம்புகிறீர்களா?  தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுபவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்பதை எல்லாம் முதலில் செய்து காட்டுங்கள்.  அதன் பின்பு தேசிய அரசியலுக்கு வாருங்கள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in