சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு: என்ன காரணம்?

சசிகலாவை ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சசிகலா சாக்லெட் வழங்கினார்.

அதிமுகவை யார் கைப்பற்றப் போவது என்கிற யுத்தத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தன்னை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என கூறிக் கொண்டு வருகிறார் ஈபிஎஸ். பொதுக்குழுவே செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார் ஓபிஎஸ். அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்து வருகிறார். அண்மை காலமாக சசிகலா, டிடிவிக்கு ஆதரவான கருத்துகளையே கூறி வருகிறார் ஓபிஎஸ். இது ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இதனிடையே, தஞ்சாவூருக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே சசிகலா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். காேயில் விழாக்கள் மற்றும் தொண்டர்களை அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஒரத்தநாட்டில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா பங்கேற்றுள்ளார். இந்த திருமணத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது, சசிகலாவை அவர் திடீரென சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இதனிடையே, வைத்திலிங்கத்திற்கு இன்று பிறந்தநாள் என்று சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே, அவருக்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் சசிகலா.

அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குரல்கள் எழுந்து வரும் நிலையில் சசிகலாவும், வைத்திலிங்கமும் சந்தித்து பேசியிருப்பது அதிமுகவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in