
திமுக தலைவராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு வைரமுத்து கவிதை மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 9-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ”பதவியில் துன்பம்தானே தவிர இன்பம் இல்லை. ஒருபுறம் முதல்வர், மறுபுறம் திமுக தலைவர். மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல நான் பதவியிலிருந்து வருகிறேன். என்னை மேலும் துன்பப்படுத்துவது போலக் கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள் தோறும் நம்மவர்கள் யாரும் எந்த புதுப் பிரச்சினையும் உருவாக்கி இருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன். சில சமயம் அதுவே என்னைத் தூங்கவிடாமல் செய்துவிடுகிறது ” என்றார். முதல்வர் பேசிய வீடியோ அவரின் கவலையை எடுத்துரைப்பதாக இருந்தது.
இந்நிலையில் மீண்டும் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்து கவிதையை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில்,
திமுக தலைவராய்
மீண்டும் மகுடம் பூண்ட
முதலமைச்சரை
இல்லத்தில் சந்தித்து
வாழ்த்துரைத்தேன்
எருதுபோல் உழைப்பு
ஏழைபோல் உணவு
திராவிடத் தினவு
தீராத கனவு
கவலை ஏன் உனக்கு?
கால்மாட்டில் கிழக்கு
சுழல்வாள் எடுத்து
சூழ்ச்சியை உடைத்து
ரெளத்திரம் படைத்து
ராஜாங்கம் நடத்து.”
எனக் குறிப்பிட்டுள்ளார்.