கத்தி தயாராக இருக்கிறது; தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் கவிஞர் வைரமுத்து

கத்தி தயாராக இருக்கிறது; தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் கவிஞர் வைரமுத்து

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் உள்ள பிறமொழிகள் அழியும் என வைரமுத்து எச்சரித்துள்ளார்.

இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, “மத்திய அரசின் அலுவல் மொழிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவுக்கு உள்துறை அமைச்சர் தலைமை ஏற்று சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அது வெறும் பரிந்துரைதான். இன்னும் மசோதாவிற்கு வரவில்லை. இதற்கு முன்னால் வந்த இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு வந்திருக்கிறது. அதை நசுக்குவது என்பது கொசு கடித்ததைப் போலத் தெரியும்.

இப்போது கொண்டு வரும் இந்தித் திணிப்பு வேறு வடிவம் கொண்டிருக்கிறது. ஒரு ஆட்டுக்கு பூ சுற்றிவிட்டு, அந்த ஆட்டுக்குப் பொட்டு வைத்து, அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது போல இந்தி திணிப்பு நின்று கொண்டிருக்கிறது. கத்தி தயாராக இருக்கிறது. தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். 1937, 1965 ஆகிய காலங்களில் எழுந்த எழுச்சியை விட 2022-ல் தமிழகம் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும்.  மத்திய அரசின் அலுவல் மொழியாக, பயிற்று மொழியாக இந்தி என்ற சாதாரணப் போக்கில் நாம் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

இந்தி என்பது இந்திய மொழிதானே அதைக் கற்றுக் கொள்வதற்கு என்ன தடை எனச் சிலர் கேட்கலாம். ஒரு மூட்டை நிறைய முந்திரி பருப்புகள் உள்ளன. அதில் பத்து வண்டுகள் உள்ளே விழுந்து விட்டன. முந்திரிப் பருப்புகளின் எண்ணிக்கை அதிகம். வண்டுகளின் எண்ணிக்கை குறைவு என நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்கள். ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் முந்திரிப் பருப்புகள் பருக்கைகளாக உடைக்கப்பட்டிருக்கும். முந்திரிப் பருப்பு மூட்டை எங்கள் தாய்மொழி. இந்தி என்பது வண்டு. இந்தி திணிப்பால் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் அழியும் நிலையில் உள்ளன ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in