வைகோவின் பிம்பம் சிதைந்துவிட்டது!

புலவர் செவந்தியப்பன் பரபரப்பு பேட்டி
வைகோவின் பிம்பம் சிதைந்துவிட்டது!

மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ பெயர் அறிவிக்கப்பட்டதில் இருந்து அந்த கட்சிக்குள் நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்சினை, சிவகங்கையில் நேற்று வெடித்துக் கிளம்பியது. திமுகவின் வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுகவைத் தொடங்கிய வைகோ, தனது மகனை எப்படி அரசியலில் பொறுப்புக்குக் கொண்டுவரலாம் என தென் மாவட்ட மதிமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சிவகங்கையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிவகங்கை மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், கொள்கை பரப்புச் செயலாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினருமான அழகுசுந்தரம், நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன், சிவகங்கை மாவட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பாரதமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துரை வைகோ நியமனத்திற்கு எதிராக, இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மதிமுகவை திமுகவுடன் இணைக்க மறைமுக வேலை நடப்பதாகப் பரபரப்பு புகாரும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து பதிலளித்துள்ள துரை வைகோ, "சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் போட்டியிட செவந்தியப்பன் சீட் கேட்டிருந்தார். ஆனால் கூட்டணியில் சிவகங்கை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தனக்கு சீட் கிடைக்கவில்லை என்ற கோபத்தால் சட்டப்பேரவைத் தேர்தலிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கட்சியின் வெற்றிக்காக வேலை செய்யாமல் வெற்றிக்கு இடையூறாக பல இடங்களில் செயல்பட்டுள்ளார்" என்று புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. துரை வைகோவின் புகார், பொதுக்குழு கூட்டம் ஆகியவை குறித்து புலவர் செவந்தியப்பனிடம் பேசினோம்.

சிவகங்கையில் போட்டியிட சீட் கிடைக்காத அதிருப்தியில் நீங்கள் கூட்டணிக்கு எதிராக வேலை செய்ததாகப் புகார் கூறப்படுகிறதே?

இந்தப் புகாரில் துளி அளவும் உண்மை கிடையாது. சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள கூட்டணி கட்சியினர் யாராவது என்மீது எந்த புகாராவது இதுவரை எழுத்துபூர்வமாக சொல்லியிருக்கிறார்களா? துரை வைகோ சொல்வது வடிகட்டிய பொய். கற்பனையான அவதூறு.

நீங்கள் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டது உண்மையா?

உண்மைதான். மற்ற கட்சியைப் போல மதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்து வேட்பாளர் தேர்வு நடைபெறுவதில்லை. நீங்கள் போட்டியிடுகிறீர்களா என்று தலைவர் வைகோ கேட்பார். நான் பலமுறை போட்டியிட சீட் கேட்டுள்ளேன். அவரும் கொடுத்துள்ளார். சில நேரங்களில் கிடைத்ததில்லை. அதற்காகக் கட்சி வேலை செய்யாமல் இருந்ததில்லை. மதிமுக போட்டியிடும் தொகுதி பட்டியலில் கடைசி வரை சிவகங்கை இருந்தது. ஆனால், துரை வைகோ திட்டமிட்டு இந்தத் தொகுதியைப் பெறவிடாமல் தடுத்துவிட்டார் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

கட்சிக்கு துரை வைகோ போன்ற இளைய தலைமுறையினர் வர வேண்டியது அவசியம்தானே?

கட்டாயம் வர வேண்டும். ஆனால், எதற்காக இந்தக் கட்சி தொடங்கப்பட்டது? ஸ்டாலின் திமுகவில் பொறுப்பிற்கு வந்தபோது, வாரிசு அரசியலை ஏற்கமாட்டேன் என கட்சி தொடங்கிய வைகோ, தனது மகனுக்காகக் கட்சியில் சமரசம் செய்வதற்குப் பதில், குப்புற விழுந்தால் எப்படி? இதனால் வைகோவின் பிம்பம் சிதைந்துவிட்டது. மதிமுக தொடங்கியதிலிருந்து 28 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்காகப் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளேன். பொடா வழக்கில் 19 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். ஆனால், கட்சிக்கு எதிராக வேலை செய்தேன் என துரை வைகோ எனக்குத் துரோகி பட்டம் குத்துவதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

நாளை நடக்கும் பொதுக்குழுவில் உங்களை கட்சியில் இருந்து நீக்கினால், உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடந்து ஒரு வருடமாகிறது. இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டும் என வைகோவிற்கு மார்ச் 8-ம் தேதி கடிதம் எழுதினேன். எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில்தான் பொதுக்குழு நடைபெற உள்ளது. என்னைப் போலவே, வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலை கொண்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மதிமுகவில் இருக்கின்றனர். பலரை தலைவர் வைகோ சமரசம் செய்திருப்பார். என்னை கட்சியைவிட்டு நீக்கினால் அதை சட்டப்படி எதிர்கொள்வேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in