கருப்புத்துண்டு இல்லாமல் கோயிலில் பவ்யமாக வழிபட்ட வைகோ: வீடியோவை வெளியிட்டு பாஜக வாழ்த்து

கருப்புத்துண்டு இல்லாமல் கோயிலில் பவ்யமாக வழிபட்ட வைகோ: வீடியோவை வெளியிட்டு பாஜக வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கருப்புத் துண்டு இல்லாமல் கோயிலில் பயபக்தியுடன் வழிபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிடக்கொள்கையின் மீது தீராத பற்றாளரான வைகோ, கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாக பயணம் செய்து வந்தவர். தந்தை பெரியாரின் கொள்கை மீது தீவிர ஈடுபாடு கொண்டதன் காரணமாக தனது தோளில் கருப்புத் துண்டை அடையாளமாக்கிக் கொண்டார். ஆனால், அவர் தற்போது கருப்பு துண்டு இல்லாமல் கோயிலில் வழிபடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டி ஊராட்சியில் மேல மரத்தோணி சுந்தரராஜபெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலை நூறாண்டுகளுக்கு முன்பு வைகோவின் தாத்தா கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலைப் புனரமைக்க வைகோ உதவி செய்துள்ளார். புனரமைப்பு பணிகளை 20-ம் தேதி வைகோ பார்வையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கோயிலில் கருப்புத்துண்டை தவிர்த்து விட்டு தீர்த்த பிரசாதம் ஏற்றுக்கொண்டு, குங்குமம் இட்டு சாமி தரிசனம் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறு.

வைகோ கோயிலில் வழிபடும் வீடியோவை பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்," அவர் வணங்கும் தெய்வம் வைகோவிற்கு நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்வும் தர வேண்டுகிறேன். முதுமை காலத்தில் இறைவன் இருப்பதை ஏற்கும் மனநிலை பகுத்தறிவுவாதிகளுக்கு வருவது சகஜம் தான். கலைஞர், வைகோ யாருமே இதற்கு விதி விலக்கு அல்ல" என்று கூறியுள்ளார். வைகோ கோயிலில் வழிபடும் வீடியோ வைரலாகி வருவதால் மதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in