`தகுதியை இழந்துவிட்டார்; ஆளுநர் ரவி யார் என்பது தெரிந்துவிட்டது'- வைகோ ஆவேசம்

`தகுதியை இழந்துவிட்டார்; ஆளுநர் ரவி யார் என்பது தெரிந்துவிட்டது'- வைகோ ஆவேசம்

"சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார். ஆளுநர் அவரது உரையில் “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை.

சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார், நம் வேற்றுமையில் வாழ்கிறார் என கூறப்படுகிறது. பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போதே நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. ''ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி'' என அத்வைத தத்துவங்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை போல ஆன்மீகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்க பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல. ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.

''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழகத்தில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in