நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் திராவிட மாடல் அரசுக்கு செல்வாக்கு வளர்கிறது: ஸ்டாலின் ஆட்சிக்கு புகழாரம் சூட்டிய வைகோ

வைகோ
வைகோபு.க.பிரவீன்

நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் திராவிட மாடல் அரசுக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "எதிர்காலத்திற்கு ஒளிமயமான சூழலை தமிழ்நாட்டிற்கு உருவாக்குவதற்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும் சகோதரர் மு.க. ஸ்டாலின் செய்து வருகிறார். இதனால் தான் மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது.

அவர் சொன்னதைப் போல பேரிடர் காலத்தில் சொல்லாததையும் செய்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியையும் வளர்ச்சிப் பாதையிலே கொண்டு வந்திருக்கிறார். எனவே, நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் திராவிட மாடல் அரசுக்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மத்திய அரசு புறக்கணிக்கிறது. இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை இதைத் தடுப்பதற்குத் திராவிட இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், இடதுசாரி சக்திகள் ஒன்றாக சேர்ந்து இன்னும் வலுவான கட்டமைப்பை அமைக்க ஸ்டாலின் ஏற்பாடு செய்கிறார் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்" என்றார்.

தொடர்ந்து, பில்கிஸ் பானு விவகாரத்தில் குற்றவாளிகள் விடுதலை செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மிகப்பெரிய கொடுமை, கண்டனத்திற்குரியது. கொலை செய்த கொலைகாரர்களை விடுதலை செய்து அந்த அரசினுடைய கொடூர மனப்பான்மையை, கோர சிந்தனையை தான் இது காட்டுகிறது" என்று பதிலளித்தார்.

மேலும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவு நாளை அனுசரிப்பது குறித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் ட்விட் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நேதாஜி எப்படி மறைந்தார் என்பது இன்றைக்கு வரை மர்மமாக இருக்கிறது. நான் அதைப் பற்றி ஆய்வு செய்து சிறையில் இருந்தபோது ஐந்து வாரம் தொடர்ந்து எழுதி இருந்தேன். எனவே, இதைப்பற்றி அடிப்படை ஞானம் கூட இல்லாமல் உலகமே இன்னும் அதைப் பற்றி தெரிந்து கொள்ளாத நிலையில் நினைவு நாள் கொண்டாடுவது என்பது அவர்களுடைய அறியாமையை காட்டுகிறது" என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in