வாரிசின் அரசியல் வருகை: வைகோ முடிவெடுக்க வேண்டிய தருணம்!

வாரிசின் அரசியல் வருகை:
வைகோ முடிவெடுக்க வேண்டிய தருணம்!

“கடந்த 56 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். 28 ஆண்டுகளாகக் காரில் பயணம், நடைபயணம், ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை என என் வாழ்க்கையை ஓரளவு அழித்துக்கொண்டேன். என்னுடைய நிலை என் மகனுக்கு வர வேண்டாம். அதனால், அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை” என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பதுதான் மதிமுகவினர் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது. அரசியல் பார்வையாளர்களும் அதுகுறித்து விவாதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

தற்போது 77 வயதில் இருக்கிறார் வைகோ. பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டினாலே கர்ஜிப்பது வைகோவின் பாணி. ஆனால், கடந்த 9-ம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துவிட்டு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது வைகோவின் பேச்சில் தளர்வு தெரிந்தது. அது வயது முதிர்வால் வரும் மாற்றம்தான். முன்புபோல பொது நிகழ்வு, கட்சி நிகழ்ச்சிகளிலும் வைகோவைக் காண முடிவதில்லை. அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை என்று மதிமுகவில் சொல்கிறார்கள். இந்தச் சூழலில்தான் மதிமுகவின் முகமாக இருந்துவரும் வைகோவுக்கு அடுத்தபடியாக, அவருடைய மகன் துரை வைகோவை கட்சிப் பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் மதிமுகவில் எழத் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், இந்த விஷயத்தில் வைகோ ஊசலாட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்களிடம் வைகோ பேசும்போதே, “என் மகன் அரசியலுக்கு வர விரும்பவில்லை. நான்பட்ட கஷ்டத்தை அவரும் பட வேண்டாம்” என்று கூறிய வைகோதான், “கட்சிக்காரர்கள் இந்த விஷயத்தில் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் நினைப்பது ஜனநாயக முறைப்படி நடக்கும்” என்றும் சொன்னார். “என் மகன் அரசியலுக்கு வர விரும்பவில்லை” என்று கூறும் வைகோ, கட்சிக்காரர்கள் என்ன முடிவை எடுத்தாலும் ஏற்கும் மனநிலையில் அவர் இருப்பதையும் உணர முடிகிறது.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, “வாரிசு அரசியலுக்காகவும் தன் மகனை பட்டத்து இளவரசராக்கவுமே என்மீது கொலைப் பழியைச் சுமத்தி கட்சியைவிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்” என்றெல்லாம் அனல் கக்கியவர்தான் வைகோ. தற்போது தன் மகனை அரசியலில் களமிறக்கிவிட்டால், அது வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தன் மீதும் தன் மகன் மீதும் வைக்க ஏதுவாகிவிடும் என்று வைகோ நினைப்பதாகவும் மதிமுகவில் சொல்கிறார்கள்.

விளாத்திக்குளத்தில் நேற்று (அக்.11) அளித்த பேட்டியில்கூட, “அரசியலுக்கு வர நான் அவரை (துரை வைகோ) ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். துரை வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சித்துவிட்டேன். தற்போது அதையும் மீறி காரியங்கள் நடக்கின்றன. இக்கட்சி தொண்டர்களால் உருவானது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ, அது ஜனநாயகப்படி நிறைவேற்றப்படும்” என்று வைகோ தெரிவித்திருந்தார்.

மற்றவர்களைப் போல வைகோவும் வாரிசு அரசியலைச் செய்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், அரசியலில் தனக்கு நிகழ்ந்த இழப்புகள், தோல்விகள் போன்றவற்றை மட்டுமே மனதில் கொண்டு தற்போது வைகோ தயங்குவதாகவே மதிமுகவினர் சொல்கிறார்கள். ஆனால், “வாரிசு அரசியல் என்பதைக் கடந்துபோக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்” என்றும் மதிமுக நிர்வாகிகள் பலரும் வைகோவிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். அதே வேளையில் இன்றைய அரசியல் வியாபாரமாகிவிட்டது என்ற கவலையிலும் உள்ளார் வைகோ. இதுபோன்ற சூழலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் போட்டியாகக் கட்சியை வளர்க்க தன் மகனும் தன்னைப் போலவே கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமும் வைகோ மனதில் ஓடுவதாக மதிமுகவில் சொல்கிறார்கள். ‘மகனின் அரசியல் வரவில் தனக்கு விருப்பமில்லை; கட்சியினரின் விருப்பம்தான் அது‘ என்று வெளியில் சொல்வதன் மூலம், ஒருவகையில் அனுதாபத்தைத் தேடிக்கொள்ள வைகோ முயற்சிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

மகனை அரசியலில் இறக்கிவிடும் விஷயத்தில் வைகோ இரட்டை மனநிலையில் இருந்தாலும், அவருடைய மகன் அரசியலுக்கு வரும் முடிவை முன்பே எடுத்துவிட்டார்.

மகனை அரசியலில் இறக்கிவிடும் விஷயத்தில் வைகோ இரட்டை மனநிலையில் இருந்தாலும், அவருடைய மகன் அரசியலுக்கு வரும் முடிவை முன்பே எடுத்துவிட்டார். கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கட்சியினருக்கு உதவிகள் செய்வது, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, தேர்தல் பிரசாரம் என கடந்த 2 ஆண்டுகளாகவே வைகோ மகன் அரசியலில் பிஸியாகவே இருக்கிறார். அண்மையில் பெரியார் பிறந்தநாள், அண்ணா பிறந்தநாள், வைகோ பிறந்த நாளையொட்டி மதிமுக சார்பில் முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் வைகோ பங்கேற்கவில்லை. ஆனால், துரை வைகோதான் பங்கேற்றார். அந்த விழாவில் துரை வைகோ பேசும்போது, “நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். துரை வையாபுரி (முன்பு அவரை ‘துரை வையாபுரி’ என்றுதான் அழைத்தார்கள்) காலம் முடிந்துவிட்டது. துரை வைகோ காலம் தொடங்கிவிட்டது என்று முன்பே நான் சொல்லிவிட்டேன். கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று பலரும் என்னிடம் கூறுகிறார்கள். அதற்கு நான் தயாராக வேண்டும். முதலில் பக்குவப்பட வேண்டும். சொல்லாற்றல், செயலாற்றலைப் பெருக்க வேண்டும். தொண்டர்கள் அழைப்பதுபோல மக்களும் நான் பதவிக்கு வர வேண்டும் என்று அழைக்கும்போது நான் கட்சிப் பதவிக்கு வருவேன்” என்று துரை வைகோ பேசியிருந்தார். அவர் அரசியலுக்கு வர எப்போதோ மனதளவில் தயாராகிவிட்டார். தற்போது அவருடைய தந்தை வைகோவின் மனதில்தான் ஊசலாட்டம்.

1993-ல் மதிமுகவைத் தொடங்கிய வைகோ, தேர்தல் கூட்டணி விஷயத்தில் எடுத்த முடிவுகள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தின. கூட்டணி சேருவது, விலகுவது போன்ற விஷயங்களில் உணர்ச்சிவசப்பட்டு வைகோ எடுத்த முடிவுகள் பெரும்பாலும் தவறாகவே போயின. குறிப்பாக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியிலேயே இருப்பதா அல்லது அதிமுக கூட்டணிக்குச் செல்வதா என்ற ஊசலாட்டத்தில் இருந்தபோது வைகோ எடுத்த முடிவு, கட்சியையே கரைக்கத் தொடங்கியது. மதிமுகவிலிருந்து மூத்த நிர்வாகிகள் எல்லாம் கழன்றுகொள்ளும் நிகழ்வு அதன் பிறகுதான் அரங்கேறியது. வைகோ யாருக்காகவெல்லாம் முன்னின்று கட்சியைத் தொடங்கி வழிநடத்தினாரோ, அவர்களே கட்சியிலிருந்து வெளியேறினார்கள். அதுபோன்ற நிகழ்வுகளை வைத்துதான், 56 ஆண்டு காலத்தில் என்னை அரசியலில் அழித்துக்கொண்டேன் என்று விரக்தியோடு வைகோ குறிப்பிட்டார்.

இன்று தன் மகன் அரசியலுக்கு வரும் விஷயத்தில், அவர் ஊசலாட்டத்தில் இருக்க அதுவும் ஒரு காரணம். தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தது, வழக்கு தொடர்ந்தது, அதை வலியுறுத்தி நடைப்பயணம் சென்றது என அரசியலில் அவர் செய்த மக்கள் பணியைத் தமிழகம் அங்கீகரிக்கவில்லையே என்று ஆதங்கமும் வைகோவிடம் நிறைய உண்டு. அதேபோன்ற ஒரு நிலையைத் தன் மகனும் சந்திக்க நேருமோ என்று எந்த ஒரு தந்தையும் நியாயமாக நினைப்பதைத்தான் வைகோவும் எண்ணுகிறார். ஒரு பக்கம் தன் மகனை அரசியலில் களமிறக்க அவருக்கு ஆசையும் உள்ளது. இன்னொரு பக்கம் பயமும் இருக்கிறது.

“என்னுடைய பயணம் பூப்பாதை அல்ல. முற்களும் கடினமான கற்களும் கொண்ட பாதை” என்று வைகோ அடிக்கடி சொல்வார். தன் தந்தையின் அரசியல் பயணத்தை துரை வைகோவும் நன்றாக அறிந்தவர்தான். இன்று அவரே அரசியலுக்கு வர முடிவு செய்துவிட்ட நிலையில், மதில் மேல் பூனையாக நிற்கும் வைகோவுக்கு ஒரு குறளை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும்.

‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு’!

Related Stories

No stories found.