வைகோவிடம் நம்பகத்தன்மையே கிடையாது!

மதிமுகவின் மூத்த மாவட்ட செயலாளர் பரபரப்பு பேட்டி
வைகோ.
வைகோ.

திமுகவில் இருந்து விலகி வைகோ மதிமுகவை துவக்கியதில் இருந்து அவருக்கு தோளோடு தோள் நின்றவர் மதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்.என்.சண்முகசுந்தரம். இப்போது அவர் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான போராட்டத்தைத் துவக்கியுள்ளார். 'காமதேனுவிற்காக' அவருடன் நடத்தப்பட்ட பேட்டி இது.

மதிமுகவில் என்ன தான் நடக்கிறது?

மதிமுக இப்போது ஜனநாயகபூர்வமாக இயங்கவில்லை. வைகோவின் மகன் துரை வைகோ நினைத்தது தான் கட்சியில் நடக்கிறது. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவரை திடீரென கட்சிக்கு அழைத்து வந்து பொறுப்பு தந்துள்ளார் வைகோ. மிசா உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்ற ஸ்டாலின், திமுகவில் கட்சி பதவிக்கு வருவதை எதிர்த்த வைகோ, எந்த அடிப்படையில் தனது மகனை மதிமுகவில் பொறுப்பிற்கு கொண்டு வந்துள்ளார்? இந்த கேள்வி தான் தமிழகம் முழுவதும் வைகோவை நோக்கி மதிமுக தொண்டர்கள் எழுப்பி வருகிறார்கள். இன்று அது சிவங்கையில் நடந்த கூட்டம் மூலம் வெடித்து வெளிப்பட்டுள்ளது.

உங்களை மதிமுகவை விட்டு நீக்க தீர்மானம் போட்டார்களாமே?

விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், 2021 அக்டோபர் 31-ம் தேதி மாவட்டத்திற்குள் நடத்தாமல், தென்காசி மாவட்டத்தில் உள்ள கலிங்கப்பட்டியில் நடத்தினார்கள். அதற்கு எனக்கு அழைப்பு இல்லை. அந்த கூட்டத்தில் என்னைப்பற்றி மோசமாக பேசச்சொல்லி தலைமை ரசித்திருக்கிறது. அத்துடன் என்னை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகளால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்கினால் பிரச்சினை ஏற்படும் என்பதால் இப்போது வரை மதிமுகவில் இருந்து நீக்காமல் உள்ளனர்.

துரை வைகோவிற்கு மதிமுகவில் பொறுப்பு தருவது சம்பந்தமாக வைகோ உங்களிடம் பேசினாரா?

ஆமாம். தொலைபேசியில் என்னிடம் வைகோ கருத்து கேட்டார். எனக்கு அதில் ஒப்புதல் இல்லை என்று தெரிவித்து விட்டேன். அத்துடன் துரை வைகோவிற்கு பொறுப்பு தருவதற்காக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. அது தான் அவருக்கு என் மீது கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மதிமுகவை அரும்பாடுபட்டு உருவாக்கிய வைகோவை இப்போது எப்படி பார்க்கிறீர்கள்?

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் பேசிய ஒருவர், " துரை வைகோவை பொறுப்பிற்கு கொண்டு வருவதாக தகவல் வருகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி துவங்கிய நாம், அப்படி செய்தால் கட்சி மரியாதை போய் விடும்" என்று பேசினார். உடனடியாக, டேபிள் மேல் அடித்து, " அண்ணா மீது ஆணையாக என் மகனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படாது" என்று கண்ணீர் சிந்தினார் வைகோ. ஆனால், அதெல்லாம் நடிப்பு என்று பின்பு தான் தெரிந்தது. தன் மகனுக்கு கட்சியில் உயர்ந்த பொறுப்பு வழங்கினார். எனவே, வைகோவிடம் நம்பகத்தன்மையே கிடையாது.

இவ்வாறு சண்முகசுந்தரம் நமக்களித்த பேட்டியில் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in