நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம்

மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு முழு அதிகாரம்

கட்சியின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிமுகவின் 28-வது பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாகைசூடி, மே 7, 2021-ல் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 விழுக்காடு, கடந்த பத்து மாத காலத்தில் நிறைவேற்றி இருக்கின்றது என்றும் சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, அனைத்துத் தரப்பினருக்கும் சமத்துவமான வளர்ச்சி, தொழில்துறையில் புரட்சி, புதிய வேலை வாய்ப்புகளைப் பெருக்குதல், கல்வி, வேளாண்மைத் துறைகளில் மறுமலர்ச்சி என தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ நல்லாட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சமூக நீதி, சமத்துவக் கோட்பாடுகளைத் தகர்க்கும் வகையில், மருத்துவப்படிப்புகளுக்கு ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்பட்ட ‘நீட்’ (NEET) எனப்படும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வை எதிர்த்தும், அந்த நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடி, பிப்ரவரி 8, 2022-ல் நீட் விலக்கு சட்ட முன்வரைவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. கல்வித்துறை பொதுப் பட்டியல் என்பதால், மாநில அரசுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்டப்படி வழங்கப்பட்டு இருப்பதை உணர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள, நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்து, காலதாமதம் இன்றி, உடனடியாக, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று, தமிழக ஆளுநரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

``இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், இத்தகைய இட ஒதுக்கீடு அரசு அமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா? என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு காரணமாகத்தான், அரசு ஆதரவில் அரசுப்பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருகின்றார்கள். ஆனால் இதற்கு ‘நீட்’ தேர்வுதான் காரணம் என்று பாஜக கூறி வருவது, திசை திருப்பும் வேலை ஆகும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்" என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் செயற்படுத்தி, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முழு உரிமையை பொதுச்செயலாளருக்கு வழங்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in