`உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் இளையராஜா'- வாழ்த்தும் வைகோ

`உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் இளையராஜா'- வாழ்த்தும் வைகோ

மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இசைமேதை இளையராஜா, வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இசை மேதை இளையராஜா, விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பண்ணைப்புரத்தில் பிறந்து, பாவலர் வரதராஜன் அவர்களின் அரவணைப்பில் பயின்று, இசைத் துறையில் உலக சாதனை நிகழ்த்தி இமயமாய் உயர்ந்து நிற்பவர் நம் இளையராஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களுக்கும், திரைப் பாடல்களுக்கும் இசை அமைத்தவர், 20 ஆயிரத்துக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர், அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ஆகியவைகளில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய அரசின் தேசிய விருதுகளை ஐந்து முறை பெற்றவர் என பல்வேறு சிறப்புக்களை அணிகலன்களாக கொண்டவர் நம் இளையராஜா. இந்திய அரசின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதும் நம் இளையராஜாவை தேடி வந்து சிறப்பு செய்தது.

லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியின் Classical Guitar Higher தேர்வில் தங்கப் பதக்கம் பெற்ற சாதனையாளரான இளையராஜா, அதே லண்டனில் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனி இசை அமைத்து, மாஸ்ட்ரோ எனும் உலக சாதனையாளராக உயர்ந்து நிற்கிறார்.

ஜெர்மன் நாட்டில் பிறந்த பீத்தோவான் ஒன்பது சிம்பொனி அமைத்து உலக சாதனை படைத்தவர் ஆவார். அவரின் தொடர்ச்சியாக நம் இளையராஜா விளங்கியதை “கொரியா நாட்டுக்காரர்கள் சாதிக்காத சாதனையை, ஜப்பானியர்களால் நிகழ்த்த முடியாத சாதனையை, அமெரிக்கர்களால் செய்ய முடியாத சாதனையை, ஏன்? உலக நாடுகளில் எங்கும் நிகழ்த்த முடியாத சாதனையை இந்தியத் துணைக் கண்டத்தில் - தென்னகத்தில் - தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நம் இளையராஜா சாதித்திருக்கிறார்” என்று நாடாளுமன்றத்தில் நான் முழக்கமிட்டு, இளையராஜாவின் புகழை உலகம் அறியச் செய்தேன்.

இசைத் துறையில் உலக சாதனை நிகழ்த்திய இளையராஜாவுக்கு மதுரை மாநகரில் பாராட்டுக் கூட்டம் நடத்தி, நம் இயக்கத்தின் சார்பில் அவருக்கு சிறப்பு செய்தோம். இசைத் துறையில் சாதனைச் சரிதம் படைத்து வரும் நம் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ள பெரும் சிறப்பாகும். இந்த இனிய வேளையில் இளையராஜா அவர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தடகள விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடி 1982-ம் ஆண்டு முதல் 1990 வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்த விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷா அவர்களும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கும் நம்முடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in