ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்திருக்கலாம்!

- சந்தேக வலை வீசும் வைகைச்செல்வன்
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஆளும்கட்சி அழுத்தம் கொடுத்திருக்கலாம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும் அதில் எழுப்பட்டுள்ள சந்தேகங்களும் தமிழக அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளருமான வைகைச்செல்வனிடம் பேசினோம்.

அதிமுக உள்விவகாரங்களில் திமுக அரசியல் செய்வதாக நீங்கள் எதைவைத்துச் சொல்கிறீர்கள்?

உண்மைதான். முன்னாள் அமைச்சர்கள் மீது தேவையில்லாமல் வழக்குத் தொடுக்கிறார்கள். எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்குத் தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், விலையில்லா சைக்கிள், அம்மா உணவகம் போன்ற திட்டங்களில் சிலவற்றைச் செயல்படுத்துகிறார்கள்; சிலவற்றை முடக்குகிறார்கள். சில திட்டங்களின் பெயர்களையே மாற்றுகிறார்கள். திமுக அரசியல் செய்கிறது என்பதற்கு இதைவிட சான்று வேறு என்ன வேண்டும்.

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே அதிமுக அரசுதான். அந்த ஆணைத்தின் விசாரணை அறிக்கையை ஆறுமுகசாமி முதல்வரிடம் அளித்திருக்கிறார். ஆனால், விசாரணை முழுமை அடையவில்லை. சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை எல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் அந்த விசாரணையே முழுமையடையும். தமிழக அரசு எந்த மாதிரியான விசாரணையை மேற்கொள்ளும் என்பது இனிதான் தெரியும். தனி நீதிபதியை நியமித்து விசாரணை செய்கிறார்களா, காவல்துறையை வைத்து விசாரணை செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.

ஜெயலலிதா இறந்த தேதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளதே?

அப்போலோ மருத்துவமனை ஒரு தேதியையும், சாட்சிகள் ஒரு தேதியையும் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான விஷயங்களில் சான்றிதழ் என்பதுதான் முக்கியமானது. அதுதான் நீதிமன்றத்திலும் செல்லுபடியாகும்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

விசாரணை அறிக்கையில் சசிகலா குறித்த சர்ச்சைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஜெயலலிதா நினைவிழந்த பிறகு யாரையும் சந்திக்க சசிகலா அனுமதிக்கவில்லை. ஆளுநரே முதல்வரைப் பார்க்க முடியவில்லை. அவரின் மருத்துவச் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை இல்லை. சசிகலா வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்கலாம். அதைத்தான் தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்தார்கள். கண்ணாடி முழுமையாக இருக்கும்போது ஒரு பிம்பம் தெரியும். உடைந்துவிட்டால் வெவ்வேறு பிம்பங்களைப் பிரதிபலிக்கும். உடைந்த கண்ணாடியை ஒட்டவைக்க முடியாது.

நீண்ட நாட்கள் ஜெயலலிதாவுடன் சசிகலா பயணித்த நிலையில் திடீரென புறக்கணித்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம். நம்பிக்கையோடு இத்தனை நாட்கள் வைத்திருந்தோம். அவர் இப்படிச் செய்துவிட்டாரே என ஜெயலலிதாவிற்கு வருத்தம் இருந்திருக்கலாம். கசப்பிற்கு பிறகான இணைப்பு என்பது கட்டாயத்தின் அடிப்படையில் நடைபெற்றது. இதை இப்படித்தான் சொல்ல முடியும். வேறு எப்படிச் சொல்லமுடியும்?

சசிகலா
சசிகலா

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒருங்கிணைப்பும் கட்டாயத்தின் அடிப்படையில் நடைபெற்றதுதானா?

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர பகைவரும் இல்லை. ஆனால், நட்பு அப்படி கிடையாது. நட்பு என்பது தூய உள்ளத்தோடு இருப்பது. துக்கம் வருகிறபோது, பக்கம் வருபவரே தூய  நண்பர். கண்ணீர் வடிக்கும் வரை காத்திருக்காமல், கண்ணீர் வராமலே காப்பவர்தான் நண்பர். நட்பு என்பது வேறு; அரசியல் என்பது வேறு. இரண்டையும் கலந்துவிடக் கூடாது.

ஜெயலலிதாவின் உடல்நிலையில் பல்வேறு சிக்கல்கள் இருந்துள்ளதாகச் சொல்கிறார்களே..?

40 வயதுக்குப் பிறகு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் எல்லாம் எல்லோருக்கும் வருவதுதான். சர்க்கரை நோயும், உயர் ரத்த அழுத்தமும் இருந்தால் எல்லா நோயும் வந்துவிடும். அவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து கட்சி அரசியல், தேர்தல் என தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டார் ஜெயலலிதா. அதுவே அவர் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் தவறு நடந்துள்ளதாக நினைக்கிறீர்களா..?

வெளிநாட்டு மருத்துவர்களின் யோசனையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்றிருக்க வேண்டும். அவர் ஒரு கால்நடை மருத்துவர். மருத்துவத் துறை செயலாளர் என்பவர் என்பதற்காக முதல்வரின் சிகிச்சையை மாற்றி அமைப்பது என்பது தவறானது. அதுபோல், அப்போலோ நிர்வாகம் சார்பில், “முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார்” எனச் சொல்லிப் பல முறை நம்ப வைத்தார்கள், கடைசியில், பிணமாகத் தான் அவரை வெளியில் அனுப்பினார்கள்.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல் முற்றிலும் தவறானது. அவர்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள். உயிர்காக்கும் மருத்துவர்கள் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும். ஒரு மருத்துவர் செய்யும் தவறு 6 அடி மண்ணில் புதைந்து விடுகிறது. ஒரு நீதிபதியின் தவறு 6 அடி உயரத்தில் தொங்கிவிடுகிறது. மருத்துவர்கள் மனித நேயத்தோடு மருத்துவம் பார்க்க வேண்டும். அவர்கள் தங்களின் நெறியிலிருந்து தவறிவிட்டார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது.

விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நால்வரும் எந்த மாதிரியான தவறுகளைச் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த முக்கியமான சூழலில், சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன், அம்மாவின் உடல்நிலை குறித்த முழு விவரங்களை அறிந்தவராக மருத்துவர் சிவக்குமார், முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய இடத்தில் சசிகலா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மிகுந்த கண்ணியத்தோடும், மிகுந்த அக்கறையோடும் செயல்பட்டிருக்க வேண்டும். பெரிய ஆளுமையுடன் நட்பு வைத்துக் கொள்வதும், மருத்துவச் சிகிச்சை அளிப்பதும் கத்திமேல் நடப்பது போன்றது. அவர்கள் தவறே செய்யாவிட்டாலும் தவறு செய்தது போலத் தோற்றம் வடிவமைக்கப்படும். அப்படி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மருத்துவக் குறிப்புகளையும் வெளிப்படைத் தன்மையோடு வெளியிட்டு, முக்கியமானவர்களைப் பார்க்க அனுமதித்து, அவர்களின் ஒவ்வொரு நிலை குறித்தும் புகைப்படம் வெளியிட்டிருக்க வேண்டும். எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த போது அவரின் படங்களை வெளியிட்டார்கள். முடி இல்லாமல், தொப்பி இல்லாமல் அவரின் புகைப்படங்களைக் கண்டு இவரா எம்ஜிஆர் என்பது போல மக்கள் நினைத்தார்கள். ஜெயலலிதா சம்பவத்தில் அத்தகைய வெளிப்படைத் தன்மை இல்லாததால் சந்தேகத்திற்கு வழிவகுத்துவிட்டது.

எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே..?

எய்ம்ஸ் மருத்துவக் குழுவைச் சுதந்திரமாகப் பார்க்கவிடவில்லை எனச் சிலர் சொல்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களும் பத்திரிகையாளர் சந்திப்பில், உண்மை நிலைமை என்ன என்பதைத் தெரிவித்திருக்கலாம். ஜெயலலிதா ஒரு தனிமை விரும்பி. தன்னைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் வெளியில் வருவதை எப்போதும் விரும்பமாட்டார். பொது நிகழ்ச்சிகளில் கூட கண்ணியத்தை எதிர்பார்ப்பார். தன்னுடைய உடல் குன்றி இருக்கக்கூடிய நிலையை வெளியில் தெரியாமல் இருக்க நினைத்திருப்பார். இது பெண்களுக்கு இயல்பான ஒன்று. ஜெயலலிதாவிற்கு இது கூடுதலாகவே இருந்தது.

தூத்துக்குடி சம்பவத்தில் மீடியாவை பார்த்துத் தெரிந்து கொண்டேன் என்றார் ஈபிஎஸ். ஆனால், நிமிடத்திற்கு நிமிடம் அவருக்கு தகவல் சொல்லப்பட்டதாக அறிக்கை சொல்கிறதே..?

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எல்லை மீறி வன்முறை நிகழ்த்தப்பட்ட பிறகே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இதில், ஈபிஎஸ் ஒரு கருத்துச் சொல்லி இருக்கிறார். ஆணையம் அதற்குப் பிறகு அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தெரிவித்துள்ளது. சம்பவத்திற்கு பிறகான நடவடிக்கையாகக்கூட அது இருக்கலாம். இந்த விஷயத்தில் ஈபிஎஸ் கருத்துதான் என்னுடைய கருத்தும்.

ஓபிஎஸ்ஸை அதிமுக மீண்டும் அரவணைக்குமா?

ஆரம்பத்தில், பிரிந்த இருவரும் மீண்டும் இணைந்து செயல்பட்டார்கள். ஆனால் தற்போது, அவர்களுக்குள் விரிசல் அதிகமாகிவிட்டது. இணைப்பு என்ற பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஈபிஎஸ் இருந்து வருகிறார். ஓபிஎஸ்ஸை மீண்டும் இணைக்கலாம் எனச் சிலர் கருத்துச் சொல்கிறார்கள். மீண்டும் ஒன்றிணைந்தால் கோஷ்டி பூசல் அதிகமாகும். எனவே, ஓபிஎஸ் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் பாதிப்பை உண்டாக்காதா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டது. ஓபிஎஸ், தினகரன், சசிகலா என எல்லோருக்கும் சிறிய அளவிலான வாக்கு வங்கி இருக்கிறது. ஆனாலும் கட்சியும், சின்னமும் தான் பலம். அதிமுக சார்பில் பலமான கூட்டணி அமைத்து, ஒரு வியூகத்தை ஏற்படுத்தும்போது அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும். அப்போது இந்த மாயைகள் எல்லாம் உடைந்துவிடும். 

தமிழகத்தில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என பாஜக சொல்லி வருகிறதே!

கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நாங்கள் தான் அடுத்த ஆளும் கட்சி, நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சிகளுமே பொதுவெளியில் பேசுவது வழக்கமான ஒன்று. மக்கள்தான் யார் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என தீர்ப்பு எழுதுவார்கள். பிரதான எதிர்க்கட்சி என அதிமுகவை மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி.

அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை என்று சொல்லமுடியுமா?

அதிமுக விவகாரங்களை பொறுத்தவரை பாஜக அரசியல் செய்வதில்லை. நாங்களும் அதை விரும்புவதில்லை.

விசாரணை ஆணையங்கள் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அதனால் எங்களைக் குறை கூறமுடியாது என ஸ்டாலின் சொல்கிறாரே?

 அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாறிய பிறகு ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம். மறைமுகமாக இதில் வேறு ஏதாவது செய்திருக்கலாம். போகப் போகத்தான் எல்லாம் தெரியும்.

சட்டமன்றத்தில் 'எதிர்க்கட்சித் துணைத்தலைவர்' எனச் சபாநாயகர் ஓபிஎஸ்ஸை அழைக்கிறாரே?

இது அப்பட்டமான விதி மீறல். எண்ணிக்கை அடிப்படையில்தான் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர்தான் ஆளும் கட்சியில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 62 பெரியதா... 4 பெரியதா? 4 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளவர்களின் கடிதத்தை ஏற்றுக்கொண்டு 62 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளவர்களின் கடிதத்தை அங்கீகரிக்காமல் புறக்கணிப்பதை அரசியல் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது. மரபுகளை மீறி சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுகிறார். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in