உத்தராகண்ட்: பொய்த்துப்போன ஹரீஷ் ராவத்தின் நம்பிக்கை!

உத்தராகண்ட்: பொய்த்துப்போன ஹரீஷ் ராவத்தின் நம்பிக்கை!

“வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிரண்டு வேறுபாடுகள் இருந்தாலும் இந்தத் தேர்தலில் நிச்சயம் இலகுவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்” - உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் ஒரு மணி நேரத்துக்கு முன்பு கூறிய வார்த்தைகள் இவை. வாக்குக் கணிப்புகள் (exit polls) ஒரு டெக்னிக்தான் என்றும் கருத்து தெரிவித்திருந்த அவர், உத்தராகண்டில் மட்டுமல்லாமல் பஞ்சாபிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் அதீத நம்பிக்கையுடன் பேசினார்.

உத்தராகண்டில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்றே வாக்குக் கணிப்புகள் கூறின. ஆனால், மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்டில் பாஜக 40-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்டில் எப்படியும் காங்கிரஸ் பாஜகவைவிட சற்றே அதிக இடங்களில் வென்றுவிடும்; எனவே பாஜக குதிரை பேரத்தில் இறங்கும் எனக் கட்சித் தலைமை கருதியது. மற்ற மாநிலங்களைவிடவும் உத்தரகாண்ட் தான் கைகொடுக்கும் என்றும் அக்கட்சியினர் நம்பியிருந்தனர். ஹரீஷ் ராவத், மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோதியால் உள்ளிட்ட தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மத்திய பார்வையாளர் தீபேந்திர ஹூடா ஆலோசனை நடத்தியிருந்தார். பாஜகவின் குதிரை பேரத்தை முறியடிக்க வேண்டும் என ஏகப்பட்ட முஸ்தீபுகளுடன் இருந்த காங்கிரஸுக்கு இந்தத் தேர்தல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

2021 டிசம்பரில், காங்கிரஸ் தலைமை குறித்து கசப்பை வெளிப்படுத்தியவர் ஹரீஷ் ராவத். கட்சியின் மாநிலத் தலைவர் கணேஷ் கோதியால், பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு வந்த யஷ்பால் ஆர்யா, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், எதிர்க்கட்சித் தலைவர் ப்ரீத்தம் சிங் எனக் கட்சிக்குள்ளேயே பலரிடம் கசப்புணர்வைக் கொண்டிருந்தார் ஹரீஷ் ராவத். தேர்தல் பணிகளில் தனக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தியில் இருந்தார். “தேர்தல் கடலில் நாம் நீந்தியாக வேண்டும். ஆனால், அமைப்பு என்னை ஆதரிக்காமல், பாராமுகம் காட்டுகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ அவர்களின் ஆட்கள் என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள்” என்றெல்லாம் ட்வீட் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். பின்னர் கட்சித் தலைமை அவரையும் பிற தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.

உண்மையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக முதல்வரை மாற்றியது போல பாஜகவும் உத்தராகண்ட் முதல்வரை கடந்த ஜூலையில் மாற்றியது. தீரத் சிங் ராவத்துக்குப் பதிலாக, புஷ்கர் சிங் தாமி முதல்வராக்கப்பட்டார். தீரத் சிங் ராவத்தே, 2021 மார்ச் மாதம் திரிவேந்திர சிங் ராவத்துக்குப் பதிலாக முதல்வராக்கப்பட்டவர்தான். பாஜகவில் இத்தனைக் குழப்பம் இருந்தாலும் தேர்தலில் அது பாதகம் விளைக்கவில்லை என்று தெரிகிறது. உத்தராகண்டில் பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் பிரதமர் மோடியின் முகத்துக்காக விழுந்தவை. காதிமா தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர் சிங் தாமிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்த் காப்ரிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. புஷ்கர் சிங் தாமி தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தச் சூழலில் கூட காங்கிரஸால் ஆட்சியமைக்க முடியவில்லை என்பது மிக முக்கியமானது.

உத்தராகண்டில் காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியமைத்துவந்தன. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகும்பட்சத்தில், முதன்முறையாக இங்கு ஆளுங்கட்சியே தேர்தலில் வென்ற வரலாறு நிகழப்போகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in