24 அமைச்சகப் பொறுப்புகளைத் தன்வசம் வைத்துக்கொண்ட தாமி!

உத்தராகண்ட் அமைச்சரவையில் விநோதம்
24 அமைச்சகப் பொறுப்புகளைத் தன்வசம் வைத்துக்கொண்ட தாமி!

உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியை பாஜக தக்கவைத்துக்கொண்ட நிலையில், புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்திருக்கிறது. யார் யாருக்கு எந்தந்த அமைச்சரவை என்பதும் நேற்று இரவு முடிவாகிவிட்டது. இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 24 அமைச்சகப் பொறுப்புகளைத் தன்வசம் வைத்துக்கொண்டிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.

இந்தத் தேர்தலில் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தாலும், மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மார்ச் 23-ல் அவர் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.

தற்போது அவர் வசம் உள் துறை, சுரங்கத் தொழில் துறை மேம்பாடு, நீதித் துறை, தொழிலாளர் துறை, கலால் துறை, பருவநிலை மாற்றம், பேரழிவு மேலாண்மை உள்ளிட்ட 24 துறைகள் உள்ளன.

அமைச்சர் சத்பால் மஹராஜுக்கு பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, கிராமப்புறக் கட்டமைப்பு, கலாச்சாரம், சுற்றுலா, நீர் மேலாண்மை உள்ளிட்ட 10 துறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நிதித் துறை, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகள் பிரேம் சந்த அகர்வாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல் முறையாக அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் சந்தன் ராம் தாஸ், சமூக நலத் துறை, சிறுபான்மையினர் நலத் துறை, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக, அமைச்சகப் பொறுப்புகள் குறித்த முடிவுகள் எட்டப்படுவதில் தாமதம் நீடித்த நிலையில், நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “விரைவில் அமைச்சகப் பொறுப்புகள் யார் யாருக்கு எனத் தீர்மானிக்கப்படும். ஆழமாகச் சிந்தித்தே இதுகுறித்துமுடிவெடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். அந்த வகையில், 24 அமைச்சகப் பொறுப்புகளை அவர் தன்வசம் வைத்துக்கொண்டிருக்கிறார். அதேசமயம், அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.