சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், ராம்பூர் தொகுயின் 10 முறை எம்எல்ஏவுமான அசம் கானுக்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிரிவு பாதுகாப்பினை உத்திரபிரதேச அரசு இன்று திரும்பப் பெற்றது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் அசம் கான். உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக 10 முறை வென்ற பெருமை இவருக்கு உண்டு. 2022, உபி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றதன் மூலம் பத்தாவது முறையாக தனது எம்எல்ஏ வெற்றியை அசம் கான் உறுதி செய்தார். அதே ஆண்டில், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்எல்ஏ பதவி தகுதியிழப்புக்கும் ஆளானார்.
மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு வளையத்தின் கீழ், அசம் கான் ’ஒய் பிரிவு’ பாதுகாப்பினை பெற்று வந்தார். இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 3 மூவர் உட்பட 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அசம் கான் காவல்துறை பாதுகாப்பினை பெற்று வந்தார்.
இந்நிலையில் ராம்பூர் கூடுதல் எஸ்பி சன்சார் சிங் அளித்த உத்தரவின்படி, அசன் கானுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் திரும்ப பெறப்பட்டனர். லக்னோ காவல் தலைமையத்திலிருந்து வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சன்சார் சிங் தெரிவித்துள்ளார். ’அசம் கானுக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை’ என்ற ஒற்றை வரி உத்தரவு மட்டுமே லக்னோவில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து இதர விளக்கங்கள் ஏதும் அதில் இடம்பெறவில்லை.