உலகிலேயே சட்டம் ஒழுங்கிற்கு உ.பி தான் முன்னுதாரணம்: சொல்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

உலகிலேயே சட்டம் ஒழுங்கிற்கு உ.பி தான் முன்னுதாரணம்: சொல்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்

சட்டம் ஒழுங்கில் நாட்டிற்கும்,உலகிற்கும் உத்தரப் பிரதேசம் முன்னுதாரணமாக திகழ்வதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி, காவல்துறை நவீனமயமாக்கல் குறித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், " உத்தரப்பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இந்த நாட்டிற்கும், உலகிற்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில் மதக்கலவரம், கிரிமினல் நடவடிக்கைகள், குற்றச்செயல்கள் போன்றன 2017-ம் ஆண்டு வரை அதிகமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. பிறகு பாஜக ஆட்சி அமைந்த பின் அங்கு சட்டம் ஒழுங்கு சிறந்து விளங்குகிறது.

இதற்கு முந்தைய ஆட்சிகளில் கிரிமினல்களுக்கு அஞ்சி காவல்துறையினர் ஓடிக்கொண்டிருந்தது. இந்தநிலை மாறி தற்போது கிரிமினல்கள் ஓடி ஒளிந்து வருகின்றனர். இம்மாநிலத்தில் பாதுகாப்பானச் சூழலை அமைக்க காவல் துறை நவீனமயமாக்கப்படுகிறது. இதன் பலனாக 25 கோடி மக்கள் தொகை கொண்ட உ.பியில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது" என்றார்.

மேலும், " எங்களுக்கு முன்பான ஆட்சியில் கைதிகளைக் கொண்டு செல்ல பழைய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், அவர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் செல்லும் சூழல் நிலவியது. இந்தநிலை, பல்வேறு வசதிகளுடனான நவீன வாகனங்கள் அளித்த பின் முற்றிலும் மாறி விட்டன. புதிய காவலர்கள் நியமனத்திலும் உ.பி அரசு மிகவும் வெளிப்படையான முறையை பின்பற்றுகிறது.

இதன்மூலம், மிகவும் திறமையானவர்களாக காவலர்கள் தேர்வாகி வருகின்றனர். இதுபோல், இன்று வரை சுமார் 1.56 லட்சம் காவலர்கள் பல்வேறு பணிகளுக்காகத் தேர்வாகி உள்ளனர். முதல்முறையாக லக்னோவில் தடயவியல் ஆய்விற்கான காவலர்கள் பயிற்சி மையத்தை உ.பி அரசு நிறுவுகிறது. இதன் பலனாக மாநிலத்தின் குற்றச்செயல்கள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

நாட்டின் அனைத்து மாநிலக் காவல்துறைகளின் மிகப்பெரிய காவல்படையாக உ.பியில் உள்ளது. இதன் பலன் உ.பி வாசிகள் அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்க அரசு வசதி செய்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in