‘என் மீது எந்த தவறும் இல்லை’ - பாலியல் புகாரில் தலைமறைவான காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டி

‘என் மீது எந்த தவறும் இல்லை’ - பாலியல் புகாரில் தலைமறைவான காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டி

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் பெற்ற ஒரு நாள் கழித்து, கேரளா பெரும்பாவூர் காங்கிரஸ் எம்எல்ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி இன்று ஊடகங்களுக்கு முன்பு தோன்றி, தான் நிரபராதி என்று கூறினார்.

இரண்டு முறையாக பெரும்பாவூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எல்தோஸ் குன்னப்பிள்ளி, தன் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் தவறு என நிரூபிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேபிசிசியின் வழிகாட்டுதலின்படி காங்கிரஸ் கட்சிக்கு தனது விளக்கத்தை அளித்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகாரளித்தப் பிறகு ஏன் தலைமறைவானீர்கள் என்று கேட்டதற்கு, "எனது முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் இருந்தது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது நிரூபிக்கப்படும். இந்த வழக்கிலிருந்து நான் விடுவிக்கப்படுவேன். அதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆனால், நீதிமன்றம் விதித்துள்ள ஜாமீன் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டியிருப்பதால் என்னால் எதையும் இப்போது வெளிப்படுத்த முடியாது. நடந்து வரும் விசாரணைக்கு நானும், என் குடும்பத்தினரும், காங்கிரஸ் கட்சியும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்று கூறினார்

வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு குன்னப்பிள்ளியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று காவல்துறையும், காங்கிரஸ் கட்சித் தலைமையும் தெரிவித்தன. இந்த நிலையில்தான் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ குன்னப்பிள்ளிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை முன்ஜாமீன் வழங்கியது.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன், எம்.எல்.ஏ தனது வழக்கறிஞர் மூலம் கே.பி.சி.சி அலுவலகத்தில் விளக்கம் அளித்துள்ளதாகவும், அது குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார்.

முன்னதாக எல்தோஸ் குன்னப்பிள்ளி மீது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி மற்றும் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக குன்னப்பிள்ளி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், தன் மீதான புகாரை வாபஸ் பெற்றால் ரூ.30 லட்சம் தருவதாக எம்எல்ஏ பேரம் பேசியதாகவும் அந்தப் பெண் பரபரப்பினை கிளப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in