தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை கறை : ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் குற்றச்சாட்டு

தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை கறை : ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் குற்றச்சாட்டு

‘நமது மாநிலத்தின் சில பகுதிகளில் தீண்டாமை என்ற கறை இருந்து வருகிறது. இது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தீண்டாமை எனப்படும் மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயலை ஒழிக்க வேண்டும்.’ எனச் சுதந்திர தின செய்திக் குறிப்பில் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

76-வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில், ‘ இந்தியா 76-ம் ஆண்டு சுதந்திர தின பெருவிழாவைச் சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறது. கரோனா தொற்று உலக பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்த போதும் அதிலிருந்து மீண்ட இந்தியா சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்பாளர்களால் உலகில் மிக வேகமாக வளர்ந்து பொருளாதாரத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம்பெற்றது.

இந்தியாவில் சிறந்த முறையில் செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, தொழில் மயமாக்கல் போன்றவற்றில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நமது மனித வளர்ச்சி குறியீடு இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக உள்ளது. இந்த சாதனை மிகத் திருப்திகரமான ஒன்றாகும்.

தமிழகத்தின் எழுச்சி என்பது இந்தியாவின் எழுச்சி. நமது மேம்பாடு மற்றும் வளர்ச்சியில் சமநிலை, சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் கடக்க வேண்டும். நமது மாநிலத்தின் சில பகுதிகளில் தீண்டாமை என்ற கறை இருந்து வருகிறது. இது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். தீண்டாமை எனப்படும் மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயலை ஒழிக்க வேண்டும்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலீடுகள் தேவைப்படுகிறது. தமிழகத்தை ஒட்டி உள்ள சில மாநிலங்கள் நமது மாநிலத்தை விடப் பல மடங்கு முதலீடுகளை ஈர்க்கிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நமது மாநிலமும் முதலீடுகளை ஈர்க்க தேவையானவற்றைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை நிலவுவதாக ஆளுநர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in