ஆள்பிடித்துதான் திமுகவை வளர்க்க வேண்டுமா?

கழகத்துக்குள் கேட்கும் அவலக் குரல்!
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தபோது...
செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தபோது...

ஜெயலலிதா மறைவால் அதிமுகவில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டபோது, “திமுகவுக்கு இப்போது நல்ல வாய்ப்பு... சில எம்எல்ஏக்களை அங்கிருந்து இழுத்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’’ என்ற பேச்சுகள் எழுந்தன. “கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் அதைச் சாதித்திருப்பார்” என்றுகூடச் சொன்னார்கள். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், ’’கொல்லைப்புறம் வழியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மாட்டேன்’’ என்று உறுதிபடச் சொன்னார்.

அதே உறுதியுடன் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து, ஜனநாயக ரீதியில் ஆட்சியைப் பிடித்தார். அப்படிப்பட்டவர், இப்போது கட்சியை பலப்படுத்த எதிர்க்கட்சியினரை இழுத்துச் சேர்க்கும் வேலைகளில் ஈடுபட, திமுக தலைவர்கள் சிலருக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கி இருப்பது கட்சிக்குள்ளேயே கசக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கள் செல்வாக்கை உயர்த்திக்காட்டவும், உள்ளாட்சி அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காகவும் திமுகவினர் அனைத்துவிதமான கொல்லைப்புற வழிகளையும் தற்போது கையாளத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான முரண். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பல இடங்களில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் தகுந்த காரணமின்றி நிராகரிக்கப்பட்டதில், லேசாகத் திறக்கப்பட்ட கொல்லைப்புற வழி தற்போது இன்னும் விரிவாகியிருக்கிறது.

அதிமுக சார்பில் உள்ளாட்சிப் பொறுப்பில் இருப்பவர்களையும், எதிர்வரும் தேர்தலில் பொறுப்புகளை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறவர்களையும் அப்படியே அலேக்காகத் தூக்கி வந்து திமுகவில் சேர்த்து வருகின்றனர். இதன்மூலம் தற்போது அதிமுகவசமுள்ள பல உள்ளாட்சிகள் குறுக்குவழியில் திமுகவுக்கு மாறிவருகின்றன.

நாமக்கல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தபோது...
நாமக்கல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தபோது...

மிகச்சிறிய மாவட்டமான மயிலாடுதுறை தொடங்கி பெரிய மாவட்டமான கோயம்புத்தூர் வரைக்கும், இந்த ஆள்பிடிக்கும் படலம் முழு வேகத்தில் நடக்கிறது. திமுக நிர்வாகிகள் போட்டி போட்டுக்கொண்டு அதிமுக ஆட்களை திமுகவுக்கு கொண்டு வருவதை மும்முரமாகச் செய்துவருகிறார்கள். மற்ற பகுதிகளைவிட, பாஜக மற்றும் அதிமுக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள் வேகவேகமாக திமுகவுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

மயிலாடுதுறையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்
மயிலாடுதுறையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

பெரும்பாலும் பதவி ஆசைகாட்டியே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வளைக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஒன்றியக்குழு தலைவர்களின் பதவி நிலைக்க வேண்டுமென்றால், திமுகவுக்கு வரவேண்டும், ஊழல் வழக்குகளில் சிக்குவீர்கள் என்றெல்லாம் ஆங்காங்கே பலரும் மிரட்டப்படுகிறார்கள். கட்சிக்கு வந்தால் தான் காண்ட்ராக்ட்டுகள் கைக்கு வரும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இப்படி, முன்னெப்போதும் இல்லாதபடிக்கு திமுக பொறுப்பாளர்கள் இப்போது இழுப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதை தலைமையும் ஊக்கம் கொடுத்து வளர்க்கிறது.

கடந்த செப்டம்பரில், ராணிப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இப்போதுள்ள திமுக அமைச்சர்களில் 8 பேர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். திமுகவில் ஆட்களே இல்லை. எல்லோருக்கும் வயதாகிவிட்டது. அதனால் அவர்கள் நம்மை வாடகை டாக்ஸியைப்போல் அழைத்துச் செல்கிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த 15 பேர், இப்போது திமுகவில் எம்எல்ஏக்களாக உள்ளார்கள். நம் கட்சியினரையே விலைக்குவாங்கி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்று சொன்னார். ஒருவகையில் அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் எம்.பி சுந்தரம் திமுகவில் இணைந்தபோது...
முன்னாள் எம்.பி சுந்தரம் திமுகவில் இணைந்தபோது...

அதிமுகலிருந்து அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். இவர்களுக்கெல்லாம் அதிமுக என்ற கட்சி இனி என்னாகுமோ என்ற கவலையைவிட, இன்னும் 5 ஆண்டுகளுக்கு எப்படி அதிகாரத் தோரணையை தொலைத்துவிட்டு இருப்பது என்ற கவலையே மேலோங்கி நிற்கிறது. அதனால், இருப்பதைப் பிடித்துக்கொண்டு கிடைப்பதைப் பார்க்கலாம் என்ற திட்டத்துடன் இவர்கள் எல்லாம் கரை வேட்டியை மாற்றிக்கட்டுகிறார்கள் என்பதுதான் நிஜம்.

திமுகவில் இணைந்த கோவை முன்னாள் மேயர்
திமுகவில் இணைந்த கோவை முன்னாள் மேயர்

உள்ளாட்சியை மனதில்வைத்தே அதிமுக பிரமுகர்கள் இழுப்புக்கு திமுகவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்படித்தான் ஏகப்பட்ட முன்னாள்கள் திமுகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

மாற்றுக் கட்சியினரை இழுக்கும் வேலைகளை ஆங்காங்கே பலரும் செய்து கொண்டிருந்தாலும், பல கட்சிக்குப் போய்வந்த அனுபவம் கொண்டதாலோ என்னவோ இந்த விஷயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முதலிடத்தில் இருக்கிறார். ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் ஒருமுகமாகக் கண்டன அறிக்கை விடுமளவுக்கு இருக்கிறது இவரது இழுப்பு மேளாக்கள்.

விழுப்புரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்
விழுப்புரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

திமுகவில் இணையும்போதே கரூர் அதிமுகவில் குறிப்பிட்ட ஆயிரம் பேரை தன்னோடு இழுத்து வந்த செந்தில் பாலாஜி, எஞ்சி இருக்கும் முக்கியப் புள்ளிகளையும் திமுகவுக்கு நகர்த்தும் வேலையை மெனக்கிட்டு செய்து வருகிறார். எப்படியாவது கரூர் மாவட்ட ஊராட்சியை திமுக வசப்படுத்த துடிக்கும் இவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலை 2 முறை ஒத்திப்போட வைத்தார். இப்படியே டீல் பேசி, மாவட்ட ஊராட்சியையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் செந்தில் பாலாஜி என்கிறார்கள்.

இப்போது கரூரைத் தாண்டி கோவையிலும் செந்தில் பாலாஜியின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கோவை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் அதிமுக கூட்டணி வைத்திருக்கும் நிலையில், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பொறுப்புகளை திமுக வசம் கொண்டுவர தனது ராஜதந்திர வேலைகளை செயல்படுத்தி வருகிறார் செந்தில் பாலாஜி. அதனால், அங்கே மக்கள் சபை நடத்தி மக்களிடம் மனுக்களை வாங்குகிறார். இன்னொரு பக்கம், மக்கள் செல்வாக்குள்ள அதிமுகவினர் யார் என்பதை நோட்டமிட்டுத் தூக்கும் வேலையும் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இரும்புப் பிடிக்குள் இருக்கும் அதிமுகவினரை காந்தமாக ஈர்த்துவரும் வேலைதான், திமுக தலைமை செந்தில் பாலாஜிக்கு கொடுத்திருக்கும் முக்கியமான அசைன்மென்ட் என்கிறார்கள்.

“இந்த இழுப்பு வேலைகளால் கட்சிக்கு கூடுதல் பலம் சேரும் என கணக்குப் போடுகிறது திமுக தலைமை. ஆனால், வழிப்போக்கர் களாலும் வந்தேறிகளாலும் திமுகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மாறாக, எந்தக் காலத்திலும் கொள்கை மாறாதவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சியின் அடித்தளத்தை செந்தில் பாலாஜி போன்றவர்கள் அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார்கள், பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருக்கும் பக்கா திமுகவினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “ஆளும்கட்சிகளை நோக்கி மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்வது இயற்கையான ஒன்றுதான். ஆனால், இப்படி கட்சி மாறுகிறவர்களால் அவர்கள் ஏற்கெனவே இருந்த கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. புதிதாக வந்துசேர்ந்த கட்சிக்கும் இவர்களால் பெரிதாக எந்தப் பலனும் கூடப்போவதில்லை. ஒரு கட்சியிலிருந்து ஆட்களை இழுப்பதன் மூலம் அந்தக் கட்சியையே அழித்துவிடலாம் என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை. அது சாத்தியமென்றால், தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலிருந்த திமுக மீண்டும் எழுந்து நின்றிருக்க முடியுமா?

ஒன்றை நன்றாகக் கவனித்தால் தெரியும்... சொந்தக் கட்சியில் செல்லாக்காசாகி ஓரங்கட்டப்பட்டவர்கள் தான் இப்போது திமுகவுக்கு வருகிறார்கள். ஒரு சிலர் தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்ள வருகிறார்கள். காரணம், நாங்கள் ஆளும்கட்சியாக இருக்கிறோம். பத்தாண்டு காலம் திமுக எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் வராதவர்கள் இப்போது வருகிறார்கள் என்றால், என்ன அர்த்தம் என்று புரிய வேண்டாமா?

அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில், பரம்பரை திமுககாரன் எல்லாம் அடிபட்டு மிதிபட்டு கைக்காசை செலவழித்துவிட்டு நிற்கிறான். இந்தச் சூழலில் மேயர் சீட், சேர்மன் சீட் என்றெல்லாம் சொல்லி அதிமுகவின் செல்லாக்காசுகளை திமுகவுக்கு இழுக்கிறார்கள். ஒருவேளை, இவர்களுக்கே சீட் கொடுத்தாலும் திமுக செல்வாக்கில் ஜெயித்தும்விடுவார்கள். ஜெயித்து வருகிறவர்கள் என்ன செய்வார்கள். தங்களது பழைய பங்காளிகளான அதிமுகவினருக்கே காரியம்சாதித்துக் கொடுப்பார்கள். ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுகவிலும் ஜெயித்து அமைச்சராகி அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சியிலும் அதுதான் நடக்கும்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் யாரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்களோ, அவர்களை நல்லவர்கள், வல்லவர்கள் என்றெல்லாம் சொல்லி ஓட்டுக்கேட்க வேண்டிய கட்டாயமும் சில இடங்களில் திமுகவினருக்கு ஏற்படும். எப்படியோ, பிடிக்க வேண்டிய நபர்களைப் பிடித்துக் கட்சியில் சேர்ந்து பதவிகளுக்கும் வந்துவிடும் இவர்கள், எவ்வளவு காலம் இங்கே தாக்குப்பிடிப்பார்கள் என்ற நிச்சயமும் இல்லை.

நாளைக்கே திமுகவுக்கு இறங்குமுகம் என்றால், இவர்களெல்லாம் அடுத்த கடையைப் பார்த்து வண்டியைக் கிளப்பமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதுமட்டுமல்ல... எதிர்க்கட்சியாக இருந்தபோதே கம்பீரமாக களத்தில் நின்ற திமுகவுக்கு ஆள்பிடித்துவந்து பலம் சேர்க்கவேண்டிய அவசியமே இல்லை. கட்சிமாறிகளால் கட்சியின் கட்டுக்கோப்பு தான் கெடுமே தவிர, கட்சிக்கு கூடுதலாக எந்தப் பலத்தையும் சேர்க்காது என்பதை தலைவர் தளபதி புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்கள்.

அதிமுகவினரை திமுகவுக்கு இழுக்க கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் கேட்டோம். “அதிமுகவினரை திமுகவுக்கு வருமாறு நாங்கள் யாரும் கட்டாயப்படுத்தவில்லை; அதற்கான அவசியமும் எங்களுக்கில்லை. திமுக மீதும் எங்கள் தளபதி மீதும் நம்பிக்கை வைத்து அவர்களாகவே வருகிறார்கள். அப்படி வருகிறவர்களை அவரவர் தகுதிக்கேற்ப உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும், எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் பதவியில் அமரவைத்து தளபதி அழகுபார்க்கிறார்; அவ்வளவுதான்” என்றார்கள்.

யார் என்ன சொன்னாலும், ‘சீசனுக்குச் சீசன் பசையான இடம் தேடிப் பறப்பவர்களை நம்பி காலம் காலமாய் கட்சியில் இருப்பவர்களை கைவிட்டுவிடாமல் இருக்க வேண்டும் தளபதி’ என்ற கோரிக்கையும் நியாயம் தானே!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in