சென்னையில் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: பொன்முடியின் அறிவிப்பு ஆளுநருக்குப் பதிலடியா?

துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி
துணைவேந்தர்களுடன் ஆளுநர் ஆர்.என். ரவி

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமையின் அடுத்த கட்டமாக ஆளுநருக்கு பதிலடி தரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆகஸ்ட் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே ஆரம்பம் முதலே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் விவகாரத்தில் தனக்குள்ள வேந்தர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களில் தமிழக அரசைப் புறக்கணிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வரும் நிலையில் அதற்கு நேர் மாறாக அதுகுறித்து விவாதிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்களை வரவழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை அவர் நடத்தினார். அது மாநில அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் நடத்தி மாநில அரசை வெறுப்பேற்றினார் ஆளுநர். அடுத்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக உள்ள சுதா சேஷய்யன் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, துணைவேந்தர் தேர்வுக்குழு அனுப்பிய பரிந்துரைகளைத் தவிர்த்த ஆளுநர் ஏற்கெனவே இருந்த துணை வேந்தராக இருந்த சுதா சேஷய்யனின் பதவிக்காலத்தை டிசம்பர் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆளுநர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து, அதை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அழுத்தம் திருத்தமாக எடுத்து வைக்கிறார். அதேபோல கடந்த ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26-ம் தேதிகளில் உதகையில் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி முடித்தார்.

இதனையடுத்துத் தான் தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கலாம் என்ற சட்டத்தை சட்டப்பேரவையில் திமுக அரசு நிறைவேற்றியது. ஆளுநர் உதகையில் மாநாடு நடத்திய அதே நாளில்தான் தமிழக சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதாவை திமுக கொண்டு வந்தது.
அதற்குப் பதிலடி தரும் விதமாக அந்த மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெயரை அச்சிட வைத்த ஆளுநர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயரை அதற்கும் கீழே போடுவதற்கு காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. அதனால் அந்த விழாவையே அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

இந்த நிலையில்தான் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாக இன்று அறிவித்துள்ளார். 'நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தும் விதமாக இந்த மாநாடு நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மாநில அரசின் உரிமைகளைப் பயன்படுத்தியே துணைவேந்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழக அரசு இடையேயான மோதலில் இது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இதற்கு ஆளுநர் தரப்பிலிருந்து என்ன பிரதிபலிப்பு இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in