2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம்: லாலு பிரசாத் யாதவ் சூளுரை

2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிவோம்: லாலு பிரசாத் யாதவ் சூளுரை

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இறங்கியுள்ளார். பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக லாலு பிரசாத் அறிவித்தார்.

பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி மாநில கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், "நான் நிதிஷ் குமாருடன் சென்று சோனியா காந்தியை டெல்லியில் சந்திப்பேன். ராகுல் காந்தியின் பாதயாத்திரை முடிந்ததும் அவரையும் சந்திப்பேன். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் அடுத்த லோக்சபா தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும். பிஹாரின் சீமாஞ்சல் பகுதிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரவிருக்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பாஜக தலைவர்கள் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களை மாநிலத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட தூண்டலாம். அமித்ஷாவின் இந்த வருகை குறித்து நிதிஷ் குமாரும் மிகவும் கவனமாக இருக்கிறார்" என்று கூறினார்.

சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். செப்டம்பர் 23ம் தேதி பூர்னியா மாவட்டத்தில் நடைபெறும் பேரணியிலும், செப்டம்பர் 24ம் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெறும் பேரணியிலும் அமித் ஷா உரையாற்றுகிறார். பிஹார் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து அமித்ஷாவின் முதல் பயணம் இதுவாகும்.

இது தொடர்பாக பேசிய லாலு பிரசாத் யாதவ், "சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பாஜக தலைவர்களின் செயல்திட்டமாகும். உண்மையான பிரச்சினைகளில் மக்களை விவாதம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம். இதுவரை பல அரசியல் கட்சிகள் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டன, ஆனால் நான் அதை செய்யவில்லை” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in