எய்ம்ஸ் விவகாரத்தில் நடப்பது என்ன?- மத்திய அமைச்சரின் கருத்து குறித்து அமைச்சர் மா.சுப்பிரமனியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்எய்ம்ஸ் விவகாரம் தொடர்பான மத்திய அமைச்சரின் கருத்து தவறானது - அமைச்சர் மா.சுப்பிரமனியன் விளக்கம்

’’மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான மத்திய அமைச்சரின் கருத்து தவறானது. நிலம் பிரச்சினை அல்ல நிதித்தான் பிரச்சினையாக உள்ளது. மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தை திசைத் திருப்ப முயல்கிறார்’’ என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் கேஸ் சிலிண்டர் வெடித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சைதாப்பேட்டையில் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிதார். 2015 - 2016 நிதிநிலை அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.1256 கோடியில் மதுரை தோப்பூரில் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

மத்திய அரசுக் கேட்ட இடத்தை அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக அரசே ஒதுக்கிக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் சொன்னது உண்மையில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்கள் என்பதே உண்மை. நிலம் பிரச்சினை இல்லை, நிதித்தான் பிரச்சினை என்பது தான் உண்மை. நிலப் பிரச்சினைப் போன்ற பூதாகரத்தை மத்திய அரசு கிளப்புவது தேவையற்றது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் முடித்துத் தர வேண்டும். கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில வேண்டும் என்பது மாணவர்களின் கனவாக இருந்தது. ஆனால் அவர்கள் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகிறார்கள்’’ என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in