ஆகஸ்ட் மாதம் மும்பையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அவர் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பலாம் என்றும் கூறியுள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எப்போது வேண்டுமானாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பலாம் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
ஆகஸ்டில் மும்பையில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் மூன்றாவது சுற்றுக் கூட்டத்தில் நிதீஷ்குமார் பங்கேற்காமல் விலகியிருக்குமாறும் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்," நிதிஷ்குமார் நம்மில் ஒருவர், அவர் எப்போது வேண்டுமானாலும் நம் கூட்டணிக்குத் திரும்பலாம். நிதிஷ் இல்லாதது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் எப்போதும் உணரப்படுகிறது”என்றும் அவர் கூறினார்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டு ஆகஸ்ட் 2022-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய முகங்களில் ஒருவராக நிதிஷ் குமார் உள்ளார்.