`அறிக்கை வந்தவுடன் பதில் சொல்கிறேன்'- துப்பாக்கிச் சூடு குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்

`அறிக்கை வந்தவுடன் பதில் சொல்கிறேன்'- துப்பாக்கிச் சூடு குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.

மன்னார் வளைகுடா பகுதியில் தமிழக மீனவர்கள் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக இந்திய கடற்படை வீரர்கள், ஹெலிகாப்டரில் மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் மீனவர் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மீனவர்களிடம் நடந்த விவரங்களை குறித்து கேட்டறிந்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனிடையே, இந்திய கடற்படை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. "சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த படகை நிறுத்தும்படி தொடர்ந்து எச்சரித்தும் நிறுத்தாமல் விரைந்து சென்று கொண்டிருந்தது. நிறுத்தாமல் சென்று கொண்டு இருந்ததால் விதிமுறைப்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேற்கொண்டு முன்னேறுவதை தடுத்து நிறுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த மீனவர் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், "எதுவாக இருந்தாலும் அறிக்கை வந்த பிறகு தான் விவரமாக சொல்ல முடியும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை வந்த பிறகு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in