மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல் முருகன்
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எல் முருகன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக  தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர், "பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக, இந்து அமைப்புக்களின்  நிர்வாகிகள் வீடு வாகனங்கள்  தாக்குதலுக்கு ஆளாகிறது. இதுபோன்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தேசிய  புலனாய்வு முகமை சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ  தவறுதலாக பயன்படுத்துவதாக  கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது. என்.ஐ.ஏ சோதனை  தேசத்தின் பாதுகாப்பு கருதி சரியான ஆதாரத்தின் அடிப்படையில்  நடைபெற்றது. ஆனால் அந்த   சோதனையை ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். அது குறித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்துக் கொள்ளப்படவில்லை. எய்ம்ஸ் ஆரம்பகட்ட பணிகள் 95% முடிந்தது என்றுதான் ஜே.பிநட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் சென்னைக்கு மாற்றப்படாது.  அதுபோன்ற எண்ணம் இல்லை. அது வதந்தி'' என்று தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in