ஜிஎஸ்டி பாக்கியை தரவில்லை என்று ஸ்டாலின் சொல்வது அப்பட்டமான பொய்!

நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் பேட்டி
டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத்
டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத்

2024 மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வரும் பாஜக, தமிழகத்தில் தங்களுக்கு செல்வாக்கான கன்னியாகுமரி, கோயம்புத்தூர் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இவ்விரு தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளராக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத் நியமிக்கப்பட்டுள்ளார். அதையொட்டிய பணிகளுக்காக கன்னியாகுமரியில் முகாமிட்டிருந்த அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் காமதேனுவுக்காக கலந்துரையாடினோம். அதிலிருந்து...

எட்டு ஆண்டு மோடி ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் ஐந்து விஷயங்களைச் சொல்கிறேன். கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டம். 80 கோடி மக்களுக்கு இலவச உணவு வழங்கும் உன்னதமானத் திட்டம் அது. கரோனா நெருக்கடி நேரத்திலும்கூட இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் தடையின்றி நடந்ததை நினைவுகூர்கிறேன். ஆயுஸ்மான் பாரத் யோஜனா திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜன் தன் வங்கிக் கணக்கு மூலம், ஜீரோ பேலன்ஸில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, மானியங்கள் அதன் வழியே சென்றுசேர்கிறது. பிரதம மந்திரி கிஷான் சம்மன் நிதித்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், ஏழைகள், தொழிலாளர்கள் ஆகியோரை மையப்படுத்தி இரவு பகல் பாராது உழைக்கிறார் நரேந்திர மோடி.

இலங்கையின் பொருளாதார சீர்குலைவு நடுங்க வைக்கிறது. கரோனாவுக்குப் பிந்தைய இந்தியப் பொருளாதாரம் எப்படி உள்ளது?

இலங்கை மட்டுமல்ல... பாகிஸ்தானும் நிலைகுலைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலகட்டத்தில் உலக நாடுகள் அனைத்துமே பொருளாதாரத்தில் மிகவும் பின்னடவைச் சந்தித்தன. ஆனால், கரோனாவுக்குப் பின்பு அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. இப்போது பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அக்னிபத் திட்டத்தில் பணியில் சேர லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், வேலைவாய்ப்பின்மை தான் என்கிறாரே ப.சிதம்பரம்?

அக்னிபத் திட்டம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலோடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொண்டுவந்த நல்ல திட்டம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வாசலைத் திறந்துவைக்கும் திட்டம் அது. நான்கு ஆண்டு திட்டத்தில் பயிற்சியில் இருப்பவர்கள் பயிற்சி முடிந்தபின் உடல் தகுதி இருந்தால் அவர்களில் 25 சதவீதம் பேரை ராணுவத்திற்கு எடுத்துக்கொள்கிறார்கள். பணியில் சேராதவர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை கிடைக்கும். அதைவைத்து அவர் சுய தொழில்கூட தொடங்கிக்கொள்ள முடியும். இது வேலைவாய்ப்பை வழங்கும் திட்டம் என்பதோடு இளைஞர்களுக்கு ஒழுக்கத்தைத் தருவதாகவும் நல்ல குடிமகனை உருவாக்கும் முயற்சியாகவும் இருக்கும்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதை எதிர்க்காவிட்டால் தான் ஆச்சரியம். எதிர்க்கட்சி என்பதாலேயே நல்ல திட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இவர்கள் அக்னிபத்தை மட்டுமே எதிர்ப்பவர்கள் அல்ல. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டபோதும் எதிர்த்தார்கள். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் எதிராக நின்றார்கள். ஜிஎஸ்டி-யையும் எதிர்த்தார்கள். எனவே, இதை எதிர்ப்பதில் வியப்பொன்றும் இல்லை!

உங்கள் மாநிலம் சார்ந்து பேசுவோம்... மகாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா மீண்டும் வலுப்பெறுமா?

மகாராஷ்டிராவில் அரசு மாறியுள்ளது. ஷிண்டே சிவசேனாவும், பாஜகவும் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது. முந்தைய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், அந்த ஆட்சியில் மக்கள் களைப்படைந்துவிட்டனர். இவ்வளவு ஏன், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களே அந்த ஆட்சியில் அலுப்படைந்துவிட்டனர். உத்தவ் சிவசேனா காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்தவுடன் தனது அடிப்படையான இந்துத்துவத்தையே கைவிட்டுவிட்டது,

அதுதான் அக்கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தி உருவாகக் காரணம். அதனால் தான் ஒரு ஷிண்டே புறப்பட்டு வந்தார். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜக அங்கு மிகவும் வலுவான கட்சிதான். சட்டமன்றத்தில் 106 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 23 லோக்சபா எம்பி-க்கள் உள்ளனர். ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுடன் நாங்கள் நல்ல உறவில் இருக்கிறோம். மகாராஷ்டிரா பாஜகவைப் பொறுத்தவரை இந்துத்துவாவில் பிடிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் எந்த நிலையில் இருக்கிறது?

தொகுதிக்கு பொறுப்பாளர்கள் போடப்பட்டுள்ளது. எனக்கு கன்னியாகுமரியும் கோயம்புத்தூரும் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டுமே நாங்கள் இரண்டு முறை வென்ற தொகுதிகள்தான். இப்போதைய சூழலில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி எங்களுக்குள் சாதக, பாதகங்களை விவாதித்து வருகிறோம். அமைச்சர் என்ற முறையில், இந்த மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் மக்களை எந்த அளவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டங்களை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தாலே வென்றுவிடலாம் என்பது என் அபிமானம்.

கச்சா எண்ணெய் மலிவாக கிடைத்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பெருமளவில் குறைக்க முடியாதது ஏன்?

பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரை அது தேசிய அளவிலான பிரச்சினை. உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது. ரஷ்யாவும் உக்ரைனும் உலகம் முழுமைக்கும் கச்சா எண்ணெய் விநியோகிகின்றன. ஆனாலும் மத்திய அரசு தனது வரி வருவாயைக் குறைத்து, விலையைக் குறைத்தது. பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்து லிட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளன. பாஜக ஆளாத மாநிலங்களில் தான் இந்தப் பிரச்சினை நிலவுகிறது.

ஜிஎஸ்டி வரி வருவாயை தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய முறையில் வழங்குவதில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே?

இது அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டு. ஜிஎஸ்டி கமிட்டி தான் வருவாய்ப் பகிர்வு குறித்து முடிவெடுக்கும். அதேசமயம், அது வெறுமனே மத்திய அரசைச் சார்ந்த கமிட்டி அல்ல. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் அதில் இருக்கிறார்கள். அடிக்கடி கமிட்டி கூட்டம் நடக்கும். அதில்தான் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிதி குறித்தும் பேசப்படும்.

இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் ஜிஎஸ்டி தொகை பாக்கியெல்லாம் கிடையாது. அரசியலுக்காக திமுக அப்படிப் பேசுகிறது. மகாராஷ்டிராவிலும் முன்னாள் முதல்வர் இதே குற்றச்சாட்டை எழுப்பிவந்தார். ஆனால், அதில் உண்மையில்லை. இருந்தாலும், நான் டெல்லி திரும்பியதும் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் இந்த விஷயத்தைப் பற்றியும் கேட்பேன்.

படங்கள்: ராஜேஷ்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in