‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்பாத கூட்டம் - மேடையிலேயே ஆவேசமான மத்திய அமைச்சர்... கேரளாவில் பரபரப்பு!

‘பாரத் மாதா கி ஜே’ கோஷம் எழுப்பாத கூட்டம் - மேடையிலேயே ஆவேசமான மத்திய அமைச்சர்... கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் 'பாரத் மாதா கி ஜே' கோஷம் எழுப்பாததால் கோபமடைந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, இந்த கோஷத்தை எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள் என ஆவேசமாக கூறியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடில் நேரு யுவ கேந்திரா மற்றும் வலதுசாரி அமைப்புகள் இணைந்து இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இந்த மாநாட்டை துவங்கிவைத்து உரையாற்றிய மத்திய வெளியுறவு மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, “கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் எனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவர். இதற்கு காரணம் ராஜீவ் காந்தி மந்திரிசபையில் அவர் ராஜினாமா செய்தது மற்றும் ஷாபானு வழக்கில் முத்தலாக்கை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதே காரணமாகும்.

அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தற்போது முத்தலாக் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. பிரதமர் மோடியின் வாக்குறுதி மக்களுக்கான வாக்குறுதியாகும். அதனால்தான் பல்வேறு நலத்திட்டங்களை விரைவாக ஊழல் இன்றி செயல்படுத்த முடிந்தது” என தெரிவித்தார்.

மீனாட்சி லேகி தனது பேச்சை முடித்த பின்னர் இரு கைகளையும் உயர்த்தி, 'பாரத் மாதா கி ஜே' என முழக்கம் எழுப்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு இளைஞர்கள் தரப்பில் இருந்து பதில் கோஷம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், பாரதம் உங்கள் தாய் இல்லையா, அதில் சந்தேகம் உள்ளதா, உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டாமா என கூறி அதே முழக்கத்தை திரும்பவும் சொன்னார்.

அப்போதும் கூட்டத்தில் ஒரு பகுதியினர் அமைதியாக இருந்தனர். இதனால் கோபமடைந்த அமைச்சர், 'ஏன் இந்த அணுகுமுறை?. தேசத்தைப் பற்றி பெருமிதம் கொள்ளாதவர்கள் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை.பாரத் மாதா கீ ஜே என கோஷம் எழுப்ப தயங்குபவர்கள் அரங்கை விட்டு வெளியேறுங்கள்' என கூறினார். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை உருவாக்கியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in