
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம், ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீசனிபகவான் சன்னதியில் அவருக்கு சிறப்பு மரியாதை செலுத்தி சாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது. அங்கு எள் தீபம் ஏற்றிவைத்து முருகன் வழிபட்டார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் சாமிகள் வரவேற்பு அளித்தார். அப்போது முருகனுக்கு தம்பிரான் சாமிகள் விபூதி பூசினார். அது சிறிதாக இருந்ததால் நெற்றி முழுவதும் சேர்த்து பட்டையாக பூசி விடும்படி தம்பிரான் சாமிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதனையடுத்து முருகனுக்கு நெற்றி நிறைய விபூதியை பூசி விட்டார்.
புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கோயிலுக்கு வந்து முருகனை வரவேற்று, அவருடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் முடிந்து எல்.முருகன் புறப்படும்போது செய்தியாளர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முற்பட்டனர். ஆனால் சுவாமி தரிசனம் செய்ததாக மட்டும் செய்தி போடுங்கள் என கூறி பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.
முன்னதாக திருநள்ளாறு வருகை தந்த மத்தியமைச்சரை புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரவேற்று மரியாதை செய்தனர்.