தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!

அமித் ஷா
அமித் ஷா

இரு முறை ரத்தான  மத்திய  உள்துறை அமைச்சர்  அமித் ஷாவின் தமிழக வருகை இந்த முறை உறுதியாகியுள்ளது. நாளை தமிழகம் வரும் அமித் ஷா பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகன பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் மத்தியில் ஆளும் பாஜக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாளை(ஏப்.12) தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள ஏற்கெனவே அமித்ஷா தமிழகம் வர இருந்தார். ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமித் ஷா  இரண்டு நாள் பயணமாக நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார். சிவகங்கையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக, வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். இந்த வாகனப் பேரணி ஒரு மணிநேரம் நடைபெறுகிறது.

அங்கிருந்து  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  செல்லும் அவர், கோட்டை பைரவர் கோயில் மற்றும்  சத்தியவாகீஸ்வரர் கோயிலில் மாலை 5 மணிக்கு சாமி தரிசனம் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மதுரை செல்கிறார். அங்கு பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக 2 கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணி மேற்கொள்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

இதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். நாளை இரவு  மதுரையில் தங்கும் அவர், நாளை மறுதினம்  சனிக்கிழமை  காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்று,  அங்கிருந்து ஹெலிகாப்டரில் தக்கலை செல்கிறார்.  தக்கலையில் காலை 9.50 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாகனப் பேரணி நடத்துகிறார்.  

அதன்பிறகு, திருவனந்தபுரத்துக்கு  திரும்பி அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி வந்து, திருவாரூர் செல்கிறார்.  நாகையில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, நாகை தொகுதி பாஜக வேட்பாளர்  எஸ்.ஜி.எம். ரமேசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். 

அமித் ஷா
அமித் ஷா

பின்னர், தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்கிறார். அங்கு புதிய பேருந்து நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் வாகனப் பேரணியில் பங்கேற்று தென்காசி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதன்பிறகு, டெல்லி புறப்பட்டு செல்கிறார். அமித் ஷாவின்  இந்த சூறாவளி சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சாரம்  பாஜக தொண்டர்களுக்கு  புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சி நம்புகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in