உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு: பாஜகவில் சேர திட்டமா?

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரபல நடிகர் திடீர் சந்திப்பு: பாஜகவில் சேர திட்டமா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் திடீரென சந்தித்து பேசியது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் சேர அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், முர்கோவ் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜ்கோபால் ராஜினாமா செய்தார். இந்நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெலங்கானா சென்றார். அவரை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் திடீரென சந்தித்துப் பேசினார். ஹைதராபாத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது இருவரும் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அமித் ஷா, இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், நடிகர் ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் பாராட்டினார். அமித் ஷாவை சந்தித்துள்ள நடிகர் ஜூனியர் என்டிஆர் பாஜக சேர திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதே நேரத்தில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in