
`மத்திய பட்ஜெட்டில் ரயில்வே, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும், மத்திய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும்' என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், `பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.70 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் பழங்குடியினருக்கு திறன் மேம்படுத்தும் பயிற்சி வழங்க ஏதுவாக ரூ.115 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.
பெண்களின் பெயரில் இரண்டு ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறேன். அதேசமயம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, இந்தியாவில் டாஸ்மாக் மற்றும் போதை பொருள் ஒழிப்பு , நதிநீர் இணைப்பு, தனிநபர் வருமானத்தை மேலும் உயர்த்துவது, ஒவ்வொரு தனி விவசாயிக்கும் ஆண்டு வருமானத்தை உயர்த்துவது, நெசவுத் தொழிலுக்கான புதிய அறிவிப்புகள் இடம்பெறாதது போன்றவை ஏமாற்றத்தை அளிக்கிறது.
பல்வேறு தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத ஒரு பட்ஜெட்டாகவே இது பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல், ஆக்கபூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும்’ என கூறியுள்ளார்.