`நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சென்னை மத்திய அரசு பள்ளியில் மாணவருக்கு கொடுமை'- ராமதாஸ் வேதனை

`நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சென்னை மத்திய அரசு பள்ளியில் மாணவருக்கு கொடுமை'- ராமதாஸ் வேதனை

`பள்ளி மாணவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு அவரது சக மாணவர்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. பள்ளி மாணவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

சென்னை அசோக் நகரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் அண்மையில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பில் புதிதாக சேர்ந்தார். அதே வகுப்பில் பயிலும் மாணவர்கள் 12 பேர் ஒன்றாக சேர்ந்து அந்த மாணவனை வன்கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வன்கேலி பற்றி பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவனை பாலியல் ரீதியாகவும் வன்கொடுமை செய்துள்ளனர். அவருக்கு உடலளவிலும், மனதளவிலும் இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளிப்படையாக விவரிக்க முடியாதவை. அதனால், பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளிக்கூடங்கள் ஆலயங்களுக்கு ஒப்பானவை. அதனால் தான் கல்வி நிறுவனங்களை கல்விக்கோயில் என்று அழைக்கிறோம். அங்கு மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, ஒழுக்கம், பெரியோரை மதித்தல், மனித நேயம், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட அனைத்து நற்குணங்களும் கற்றுத் தரப்பட வேண்டும். ஆனால், சென்னை அசோக் நகர் மத்திய அரசு பள்ளியில் மாணவர்களின் நடத்தையும், செயல்பாடுகளும் அவற்றுக்கு முற்றிலும் எதிரானவையாக உள்ளன. மாணவர் சமுதாயம் எங்கே செல்கிறது? என்ற அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன. கோயில்களாக திகழ வேண்டிய பள்ளிகள் வன்முறைக் கூடங்களாக மாறி வருவதும், மாணவர்கள் திசை மாறிச் செல்வதும் தடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மாணவர்கள் ஒழுக்க நெறி தவறி செல்வதற்கும், வன்முறைப் பாதையில் பயணிப்பதற்கும் ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆனாலும் அவற்றில் இருந்து மாணவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பள்ளி நிர்வாகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. அசோக் நகர் பள்ளியில் மாணவருக்கு ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமை ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்திலேயே இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டிருந்தால் மாணவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்ய மத்திய அரசு பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது.

வன்கேலியிலும், வன்கொடுமையிலும் ஈடுபட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்; வகுப்புகளுக்கு வெளியே வெகு நேரம் இருந்திருக்கிறார்கள்; பள்ளியில் கண்காணிப்பு கேமரா இல்லாததை காரணம் காட்டி அவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்யப் போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது; இவை தவிர கத்தியும் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வளவும் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் எவ்வாறு தெரியாமல் போனது எனத் தெரியவில்லை. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் அனைத்து சிக்கல்களுக்கும், சீர்கேடுகளுக்கும் காரணமாகும். இந்த விவகாரத்தில் தவறு செய்த அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரை அவர் விரும்பும் பள்ளியில் சேர்த்து அமைதியான சூழலில் கல்வியை தொடரச் செய்ய வேண்டும்.

மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலத் தூண்கள் ஆவர். அதற்கான பாதையிலிருந்து அவர்கள் திசை மாறாமல் காக்க வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்திற்கும், குறிப்பாக பள்ளிகளுக்கும், ஆசிரியர் பெருமக்களுக்கும் உண்டு. இதை உணர்ந்து அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், அனைத்து வகுப்புகளிலும் நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

இவை அனைத்திற்கும் மேலாக, மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ, அவை அனைத்தையும் விதிகளுக்கு உட்பட்டு எடுப்பதற்கான அதிகாரம் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in