ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய ஒரே மாதிரியான சட்டம் தேவை: மக்களவையில் மத்திய அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய ஒரே மாதிரியான சட்டம் தேவை

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அப்போது தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், தமிழகத்தில் 40 இளைஞர்கள் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “இந்தியாவில் உள்ள 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்கள் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தை தடுப்பதையும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. வெவ்வேறு மாநிலங்கள் சட்டம் இயற்றியிருப்பதால் தற்போதைய சூழ்நிலை குழப்பமாக உள்ளது. இதனை ஒழுங்குபடுத்த ஒரே மாதிரியான சட்டம் தேவை. ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும், மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனையடுத்து, ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முயல்வதாக காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் எனவும் விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in