இந்தக் கூத்தெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா?

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட செட்- அப் நாடகங்கள்!
இந்தக் கூத்தெல்லாம் ஸ்டாலினுக்குத் தெரியுமா?

அண்மையில் தேனி சென்றிருந்தபோது, பத்திரிகை நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு ஒரு நல்ல பழக்கம். தனக்காகவோ தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ அரசு அலுவலகங்களை நாட வேண்டியதிருந்தால், எக்காரணம் கொண்டும் தான் ஒரு பத்திரிகையாளர் என்று சொல்லவே மாட்டார். பொதுமக்களில் ஒருவராகப் போய், அந்த வேலையை அரசு அலுவலர்கள் எப்படிச் செய்கிறார்கள், என்னென்ன காரணங்களைச் சொல்லி இழுத்தடிக்கிறார்கள், லஞ்சத்துக்காக எப்படியெல்லாம் அடிபோடுகிறார்கள் என்பதைக் கவனிப்பார். வேலை முடியும் வரையில் தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளவே மாட்டார். அவர் சந்தித்த அனுபவங்களைச் செய்தியாக்கியோ அல்லது மேல் அதிகாரிகளிடம் முறையிட்டோ ஒட்டுமொத்தமாக அந்தப் பிரச்சினைக்கு ஏதாவது தீர்வுகாண முடியுமா என்று பார்ப்பார்.

அவரை நான் சந்தித்தபோது எங்கள் உரையாடல், 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்' பக்கம் திரும்பியது. "நெல்லை மாவட்டத்தில் உள்ள என்னுடைய பூர்விக கிராமத்தில், 6 மாதத்துக்கு முன்பு 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தார்கள். ஆனால், அக்கா வீட்டுக்கு மட்டும் தண்ணீர் வரவேயில்லை. ஊராட்சி அலுவலகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லியும் பயனில்லாததால், என்னிடம் சொன்னார். 'ஒண்ணும் இல்லக்கா. உங்கள் தொகுதியில் முதல்வர் என்றொரு திட்டம் இருக்கிறது. இணையம் வழியிலேயே புகார் அனுப்ப முடியும். உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றும் முதல்வர் அலுவலகத்தில் கண்காணிப்பார்கள். நான் சொல்கிறபடி உன் மகளை புகார் அனுப்பச் சொல்' என்றேன்.

அப்படியே, கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்கமாக என்ன ஏது என்று போன் பண்ணியாவது விசாரிப்பார்கள். ஒரு அசைவும் இல்லையே? என்று நெல்லை மாவட்ட ஆட்சியரின் ட்விட்டர் கணக்கிலும், ‘வணக்கம் நெல்லை’ என்ற மாவட்ட நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண்ணிலும் அதே புகாரை மருமகள் அனுப்பியிருக்கிறாள். வீட்டுக்கு வந்து பார்த்த அதிகாரிகள், 'உங்கள் வீட்டுக்கு சப்ளை வருகிற குழாயில் வால்வு பிரச்சினை இருக்கிறது. 5 நிமிட வேலைதான். அதை மாற்றிவிட்டால் சரியாகிவிடும்' என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். 2 வாரமாகியும் திரும்ப வரவில்லை.

அக்கா உடம்புக்கு முடியாதவர் என்பதால், எனக்குப் போன் பண்ணி ரொம்பவே வருத்தப்பட்டாள். 'எல்லா வீட்டுக்கும் தண்ணீர் வருது. 6 மாசமா நமக்கு மட்டும்தான் பிரச்சினை' என்று. உடனே, கலெக்டர் அலுவலகத்தின் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலரைத் தொடர்புகொண்டு, 'சார், எங்க அக்கா வீட்டில் தண்ணீர் வரவில்லை. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. அடுத்ததாக தகவல் பெறும் உரிமைச்சட்டம் அல்லது நிரந்தர மக்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்றிருக்கிறோம்' என்று மட்டும் சொன்னேன்.

மறுநாளே, அதிகாரிகள் பட்டாளமே அக்கா வீட்டுக்குச் சென்றிருக்கிறது. சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் போன்றோரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் அக்கா இல்லை. பக்கத்தில் விசாரித்தபோது, உள்ளூரில் நடக்கும் பட்டா மாறுதல் முகாமுக்கு அக்கா சென்றிருப்பது தெரிந்திருக்கிறது. இருந்தாலும் எதுவும் சொல்லாமல், கேட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்து தண்ணீர் குழாயை ஆய்வு செய்திருக்கிறார்கள். ஊரின் மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டு ஆய்வு செய்தபோது சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை.

உடனே, அந்தத் தெருவில் வீடுவீடாகச் சென்று, ‘யாரும் தண்ணீர் பிடிக்காதீர்கள். ஒரு ஆய்வுக்காகத் தண்ணீர் திறந்திருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு, ரொம்ப நேரம் காத்திருந்தால் அந்த குழாயில் தண்ணீர் வரத் தொடங்கியிருக்கிறது. திருகு இல்லாமல் இருந்த அந்தக் குழாயில் ஒரு திருகியை மாட்டி தண்ணீர் விழுவது போல, வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு அக்காவை வரச்சொல்லி, எதுவுமே தெரியாததுபோல, ‘என்னம்மா இதுதான் உன் வீடா? எவ்வளவு நேரமா காத்திருக்கோம் தெரியுமா? கதவைத் திறமா’ என்று சொல்லி உள்ளே போயிருக்கிறார்கள்.

‘அய்யய்யோ இதென்ன வீட்டுக்குள்ள யாரோ வந்து ஒலப்பியிருக்காங்க’ என்று அக்கா சொல்ல, ‘அதைவிடும்மா தண்ணி குழாய் எங்கிருக்கு காட்டு...’ என்று கேட்டு, ‘இப்ப திறமா தண்ணி வருதான்னு பார்க்கலாம்’ என்று சொல்ல, ’இதென்ன புதுசா திருகு எல்லாம் மாட்டியிருக்குது’ என்று கேட்க, ‘அதைவிடும்மா தண்ணி வருதான்னு பாரு’ என்று அவர்கள் சொல்ல, தண்ணீர் வந்திருக்கிறது. கடைசியில், ‘இப்படித்தான் தண்ணி குழாயை திறக்கணும். இதைப் பயன்படுத்தத் தெரியாம புகார் பண்ணிருக்கீங்களே’ என்று சொல்லி அக்காளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள். அவர்கள் காத்திருந்து வீட்டுக்குள் நுழைந்தது தொடங்கி தண்ணீர் வந்தது, அக்காளுக்கு குழாயைப் பயன்படுத்தும் வழிமுறையைச் சொல்லித்தருவது வரையில் வீடியோ எடுத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

மறுநாளில் இருந்து பழையபடி தண்ணீர் வரவில்லை. ஊராட்சி செயலரிடம் கேட்டபோது, ‘உ.தொ.முதல்வர் திட்ட மனு என்பதால், உடனே முடிக்கச் சொல்லி மேலிடத்தில் இருந்து பிரஷர். அதனாலதான் அப்படிச் செஞ்சிட்டாங்க. சீக்கிரமே இந்தத் திட்டத்தில் வேலை பார்த்த காண்ட்ராக்டரைப் பிடித்து உங்கள் குழாயில் உள்ள பிரச்சினையைச் சரி செய்துவிடுவோம்’ என்றிருக்கிறார். இது ஒரு உதாரணம்தான், இப்படித்தான் முதல்வருக்குப் போகும் மனுக்களில் பல தீர்த்துவைக்கப்படுவதில்லை, முடித்து வைக்கப்படுகிறது” என்றார் அந்த நண்பர்.

இன்னொரு விஷயத்தையும் சொன்னார், “முதல்வருக்கு மனு அனுப்பி நிறைய அதிகாரிகள் ஊருக்கு வந்தது வேறுவிதமான பிரச்சினையை அந்த ஊரில் உருவாக்கியிருக்கிறது. ‘என்னம்மா, எதுவா இருந்தாலும் நம்ம ஊர்லேயே சொல்லி சரி பண்ணியிருக்கலாம்ல... இப்படியா முதலமைச்சர் வரைக்கும் புகார் பண்றது... இனிமே ஊர்ல எந்தப் பிரச்சினைன்னாலும் அந்தப் பொம்பளைதான் மொட்டைக்கடிதாசு போட்டிருக்கும்னு உன்னைத்தானே சொல்வாங்க’ என்று தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் அக்காவுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘ஏன்டா, தண்ணி வராட்டா கூட பரவாயில்லை. வெளியில தலைகாட்ட முடியாம பண்ணிட்டியேடா’ன்னு அக்கா என்னிடம் வருத்தப்படுகிறார்” என்றார் நண்பர்.

ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை கிழக்குத் தொகுதிக்கு மு.க.ஸ்டாலின் வந்தபோது, பொதுப் பிரச்சினைக்காக 2 மனுக்களை எழுதிப் பெட்டியில் போட்டவன் என்ற முறையில் எனக்கும் இதே அனுபவம் உண்டு. 2 பிரச்சினையுமே தீரவில்லை. ஆனால், நான் மனு போட்ட தகவல் மட்டும் ஊராட்சித் தலைவர் முதல் உள்ளூர்வாதிகள் அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டது.

முதல்வரின் கனவு

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம். காரணம், தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், “இங்கே ஒரு பெட்டி வைத்திருக்கிறேன். உங்கள் கோரிக்கைகளை எழுதிப்போடுங்கள். அடுத்தது திமுக ஆட்சிதான். நான் முதல்வராகப் பொறுப்பேற்ற அடுத்த 100 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறேன்” என்று சொன்னார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதல்வராகப் பொறுப்பேற்ற அன்றே, உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையையே தொடங்கினார் ஸ்டாலின்.

இதற்கென சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகரை நியமித்த முதல்வர், தமிழகம் முழுவதும் தான் பெற்ற மனுக்கள் அனைத்தையும் அவர் வசம் ஒப்படைத்தார். இவ்வாறு பெறப்பட்ட 70 ஆயிரம் மனுக்களும் உடனடியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், முடிந்த அளவுக்கு துரிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் தனிநபர்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுவதாக, தமிழக அரசு செய்திக் குறிப்பை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர் மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு ‘முதல்வரின் முகவரி’ என்ற துறை உருவாக்கப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் சிறப்பு அலுவலரான ஷில்பாவே, விரிவுபடுத்தப்பட்ட இந்த மொத்தத் துறைக்கும் நியமிக்கப்பட்டார். இந்தத் துறையையும் தன் வசமே வைத்துக்கொண்டார் ஸ்டாலின். காரணம், இதன் மூலம் நமக்கு நற்பயன் கிடைக்கும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஆனால், சாதாரண தண்ணீர் குழாய் பிரச்சினையில் கூட, செட்டிங், ஷூட்டிங் நடத்தி வீடு தேடி முதல்வருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

முதலமைச்சர் தகவல் பலகை
முதலமைச்சர் தகவல் பலகை

இதோ இந்த 23-ம் தேதி கூட, முதலமைச்சர் தகவல் பலகையைத் திறந்துவைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் அறிவிப்புகள், திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து நொடிக்கு நொடி அப்டேட் தரும் இந்தத் தகவல் பலகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த புள்ளிவிவரமும் தெரியுமாம். இது ஒரு மகத்தான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தான் கொடுத்த ஒரு தேர்தல் வாக்குறுதிக்காக முதல்வர் இவ்வளவு உழைக்கிறாரே என்று பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால், முதல்வர் சதா கவனித்துக்கொண்டிருக்கிறார் என்றதும் இந்த அரசு ஊழியர்கள் புகார்களை வேகமாகத் தீர்ப்பார்களா, அல்லது இன்னும் வேகமாக முடித்துவைத்து செட்டப் வீடியோக்களை அனுப்பி வைப்பார்களா என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

எடப்பாடி பழனிசாமி ஓட்டிய அதே வாகனத்தில், டிரைவர் மட்டும்தான் மாறியிருக்கிறார். ஆனால், எல்லாமே மாறிவிட்டது என்கிற கனவிலேயே முதல்வர் ஸ்டாலின் சஞ்சரிக்கிறார் போல் தெரிகிறது. குறைந்தபட்சம் தன் கட்சிக்காரர்கள் சிலரையாவது மனு போட வைத்து, உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று முதல்வர் ஒரு குறுக்கு விசாரணை போட்டால் ஒழிய, தனித்துறையை ஏற்படுத்தி, தகவல் பலகை வைத்து கண்காணிக்கும் அவரது முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

செய்வாரா ஸ்டாலின்?

Related Stories

No stories found.