இன்று மாலை 6 மணி வரை தான் ஈபிஎஸ்க்கு கெடு: சமாதானத் தூதுவர்களிடம் ஓபிஎஸ் திட்டவட்டம்!

இன்று மாலை 6 மணி வரை தான் ஈபிஎஸ்க்கு கெடு: சமாதானத் தூதுவர்களிடம் ஓபிஎஸ் திட்டவட்டம்!

ஒற்றைத் தலைமை யாருக்கு என்பது குறித்து அதிமுகவில் நடந்து வரும் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் சந்தித்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். இன்று மாலை 6 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கெடு விதித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இதனை விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என்று அறிவித்தார். இதனால் இரண்டு தரப்பினரிடமும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.

இந்த நிலையில் இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களைத் திரட்டி வருகின்றனர். தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள இருவரின் வீட்டிலும் அவரவர் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் பெரும்பாலானோர் ஆஜராகி அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த நான்கு தினங்களாக இருவரையும் சமாதானப்படுத்த அதிமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் பலர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று மீண்டும் சமாதானப் படலத்தில் இறங்கியுள்ளார். அதற்காக ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்த தம்பிதுரை அவரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது ஓபிஎஸ் தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படாது என்பதை இன்று மாலை 6 மணிக்குள் ஈபிஎஸ் தரப்பு உறுதியாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் சமாதானம், இல்லையென்றால் நடப்பதை பார்த்துக் கொள்ளலாம். என் வழி தனிவழி என்று ஓபிஎஸ் உறுதிபட தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஈபிஎஸ் இல்லத்திற்கு சென்ற தம்பிதுரை அங்கு ஆலோசித்துவிட்டு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் திரும்பவும் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in