HBD UDAYANIDHI: சனாதன சர்ச்சை... உதயநிதியை நாடறிந்த தலைவராக்கிய பேச்சு!

த மு எ க ச விழாவில் உதயநிதி ஸ்டாலின்
த மு எ க ச விழாவில் உதயநிதி ஸ்டாலின்

ஒரு சட்டமன்ற உறுப்பினராக அதையும் தாண்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதுமட்டுமின்றி திமுகவினரிடையே அடுத்த கட்ட தலைவராகவும் பரிணமித்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உதயநிதியை முன்னிலைப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பமும், அவர்களோடு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சேர்ந்து  தீவிரமாக வேலை பார்க்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டின் அரசியல் சூழலும், திமுகவின் கைகளுக்கு வந்த ஆட்சி அதிகாரமும் உதயநிதியை ஒரேயடியாக உயரத்துக்கு கொண்டுபோய் சேர்த்து விட்டது. 

ஆனால் இவர்கள் யாரும் அவ்வளவு தூரம் தீவிரமாக செயல்படாமலேயே, தனது இயல்பான ஒரு பேச்சின் மூலமாக  இந்தியளவில் சென்றடைந்துவிட்டார் உதயநிதி. இந்தியளவிலான இந்த ரீச் வேறு எந்த வளரும் அரசியல்வாதிக்கும் கிடைக்காத வாய்ப்பு. சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என  பேசிய பேச்சுக்கு இவ்வளவு பெரிய எதிர்வினை வருமென அவரே எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி எழுந்த  எதிர்வினைகளை உதயநிதி ஸ்டாலின் எதிர்கொண்ட விதமும்  யாரும் எதிர்பாராத ஒன்றுதான். தேன்கூட்டைக் கலைத்தது போல தான். ஆனால், அதன் பிறகும், நான் பேசியதில் தவறில்லை என்று உதயநிதி காட்டிய உறுதி, அவரைப் பக்குவப்பட்ட அரசியல் தலைவராகவும் காட்டியது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 1 ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி, சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனத்தை  எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்றார். 

அது திமுகவினர் எப்போதும் பேசும் ஒரு பேச்சுதான். ஆனால் பா.ஜ.க. இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய ஆரம்பித்தது.   

உதயநிதி  பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.கவின் தகவல் தொழில் நுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா, "இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு" உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.  அதைத்தொடர்ந்து பாஜகவில் ஒவ்வொருவராக இது பற்றி பேசத் தொடங்க உதயநிதியின் பேச்சு, நாடு முழுவதும் பேசு பொருளாகவும் விவாதமாகவும் மாறியது.

இதற்குப் பிறகு, உதயநிதி பேசிய பேச்சின் வீடியோ காட்சிகள் வெட்டப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பா.ஜ.கவின் மாநிலப் பிரிவுகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். 

இந்தியா கூட்டணியிலும் இது விவாத பொருளாக மாறியது. மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் உதயநிதியின் கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னார்கள்.  தொலைக்காட்சிகளில் தேசிய அளவிலான தலைப்புச் செய்தியாக, உதயநிதி சனாதனம் குறித்துப் பேசியதே இருந்தது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்தார்.

இதன் மூலம்  உதயநிதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களிடமும் எளிதில் சென்று சேர்ந்தார்.  ஒரு கருத்து சர்ச்சை ஆனதற்குப் பிறகு,  தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று பல்டி அடிப்பது தான் அரசியல்வாதிகளின் வழக்கம். சமீபத்திய உதாரணமாக குஷ்பு சேரி என்றால் அன்பு என்றது போல் எல்லாம் உதயநிதி பின்வாங்கவில்லை.

சற்றும் பின்வாங்காமல் அதை எதிர்கொண்டார். சனாதன தர்மம் குறித்து, தான் பேசியதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற பொருளிலேயே தான் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது பலரிடமும் அவரின் மதிப்பை மேலும் உயர்த்தியது.

ஒரே ஒரு பேச்சு அவரை நாடறிந்த அரசியல் பிரபலமாக ஆக்கியது என்பது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தன்னுடைய பேச்சு சரியானது தான் என்று அதில் உறுதியாக நின்று அதற்கு எழுந்த அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்ததன் மூலம், தான் ஒரு உறுதியான நிலைப்பாடு  உள்ள  தலைவர் என்பதையும் உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறார். ரூ.10 கோடி விலை வைக்கப்பட்ட தன்னுடைய தலை குறித்து கேட்ட போது, ‘பத்து ரூபாய் சீப்பு போதும்... நானே சீவிக் கொள்கிறேன்’ என்ற உதயநிதியின் பேச்சு, தொண்டர்களிடையே சிரிப்பலையை மட்டுமல்ல... தங்கள் மானசீக தலைவர் கலைஞரை நினைவுப்படுத்தி, ஸ்டாலினை விட உதயநிதியை இன்னும் நெருக்கமாக உணர செய்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in