மக்களவைத் தேர்தல் வெற்றி இலக்கு; மகுடம் சூடத் தயாராகும் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Updated on
3 min read

மக்களவைத் தேர்தலில் மோடியை மூன்றவாது முறையாகவும் பிரதமர் நாற்காலியில் அமர்த்த பலவகைகளிலும் மெனக்கிடுகிறது பாஜக. எதிர்தரப்பில், இந்தத் தேர்தல் முடிவுகளை வைத்து உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் இருக்கையில் அமர்த்த கச்சிதமாய் கணக்குப் போடுகிறது திமுக.

கடந்த மக்களவைத் தேர்தலின்போதே உதயநிதி ஸ்டாலினின் தாக்கம் திமுகவில் படர ஆரம்பித்தது. அவர் கைகாட்டிய சிலர் அப்போது வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாநிலம் முழுவதும் பம்பரம்போல சுழன்று பரப்புரை செய்தார் உதயநிதி. அந்த தேர்தலில் திமுக தமிழகத்தில் 38 தொகுதிகளில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றிக்கான அங்கீகாரமாக திமுகவின் இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி.

இளைஞரணி செயலாளர் ஆனதும் கட்சியிலும், மக்கள் மன்றத்திலும் படுவேகமாக செயல்பட ஆரம்பித்தார் உதயநிதி. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நியமனங்கள் மட்டுமல்லாது தேர்தல் வியூகம், அறிக்கை, தொகுதிப் பங்கீடு விஷயங்களிலும் அவரின் கை ஓங்கியே இருந்தது.

இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகவும் களமிறங்கினார் உதயநிதி. அந்த தேர்தலில் எய்ம்ஸ் செங்கல், நீட் எதிர்ப்பு, அதிமுக மீதான விமர்சனம் என உதயநிதியின் தேர்தல் பரப்புரை தமிழக மக்களை வெகுவாக கவர்ந்தது. அப்போதே உதயநிதி அமைச்சரவைக்குள் வருவார் என பேசப்பட்டது. ஆனால், விமர்சனங்களை தவிர்க்க அப்போது அடக்கி வாசித்தது திமுக; உதயநிதியும் பொறுமைகாத்தார்.

அமைச்சர் ஆகாவிட்டாலும் ஆட்சியில் நம்பர் 2 என்ற வகையில் திமுகவினர் உதயநிதியை அனைத்திலும் முன்னிறுத்த ஆரம்பித்தனர். கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், ஆட்சி நிர்வாகத்தில் உதயநிதிக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டது. முதல்வர் ஸ்டாலினால் பங்கேற்க இயலாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உதயநிதிக்கு தரப்பட்டது.

இப்படி படிப்படியாக முதல்வரிசைக்கு கொண்டுவரப்பட்ட உதயநிதி, 2022ம் ஆண்டு டிசம்பரில் அதிகாரபூர்வமாக அமைச்சரானார். அடுத்தகட்டமாக, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என திமுகவினர் பரவலாக பேச ஆரம்பித்திருக் கிறார்கள். ஆனால், அந்தத் தேன்கூட்டில் இப்போது கைவைத்தால் அது எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியல் பிரச்சாரத்துக்கு சாக்காகிவிடும் என்பதால் அமைதிகாக்கிறார் ஸ்டாலின். ஆனால், இந்த அமைதி நீடிக்காது என்று சொல்லும் திமுகவினர், மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உதயநிதி துணை முதல்வராவது உறுதி என்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்

கடந்த ஒரு வருட காலமாகவே மாநிலத்துக்குள் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பேசுபொருளானார் உதயநிதி. சனாதனம் குறித்து அவர் பேசிய பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதற்கு பிரதமர் மோடி தொடங்கி அமைச்சர்கள் வரைக்கும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல வெள்ள நிவாரணம் கேட்டபோது, “உங்கள் அப்பன் வீட்டுக் காசை கேட்கவில்லை?” என கேட்டு மத்திய அரசை சூடாக்கினார் உதயநிதி.

கோவை மண்டல திமுக பொறுப்பாளராக இருந்த செந்தில் பாலாஜி சிறை சென்றதும் அங்கே திமுக ஸ்தம்பித்தது. ஏற்கெனவே கோவை மண்டலத்தில் திமுக வீக். அங்கே பெரும் எழுச்சியை உருவாக்கிய செந்தில் பாலாஜியின் இடத்தை நிரப்பும் பொறுப்பை உதயநிதியிடம் ஒப்படைத்தது தலைமை. கோவை மண்டலத்தில் இப்போது ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருகிறார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதற்கு மத்தியில், இந்தத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, பொறுப்பாளர்கள் நியமனம், வேட்பாளர் பட்டியல் என அனைத்தையும் தனது கண்பார்வையிலேயே வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அண்மையில் உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் பலரும் கூடி ஆலோசனை நடத்தியது இதற்கு ஒரு சாட்சி.

இந்தத் தேர்தலில் உதயநிதி கைகாட்டும் இளைஞரணியின் புதுமுகங்கள் சிலருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. கடந்த தேர்தலில் எப்படி ஒற்றை செங்கலை வைத்து ஊரெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ அதுபோல இப்போதே, ‘ 28 பைசா பிரதமர் மோடி’ என்ற நூதனப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார் உதயநிதி.

இந்தத் தேர்தலிலும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உதயநிதிக்கு பிரச்சாரப் பயணங்கள் தயாராகின்றன. அனைத்துத் தொகுதிகளிலும் இம்முறையும் உதயநிதி தான் முக்கிய பிரச்சார முகமாக இருப்பார். இதன் மூலம், ’திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் உதயநிதியின் பிரச்சாரம்’ என்ற பிம்பம் பொதுமக்கள் மத்தியில் கட்டமைப்படும். அதன் பிறகு யாரும் அதிருப்திகொள்ளாத விதத்தில் துணை முதல்வர் இருக்கையில் அமரவைக்கப்படுவார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி துணை முதல்வராவது பதவிக்காக மட்டுமல்ல... அது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய செயல் திட்டம். ஏனெனில் மக்களவைத் தேர்தல் முடிந்ததுமே அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க இருக்கிறது திமுக. அதிலும் முக்கியமாக, இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கி வரும் அண்ணாமலை, சீமான், நடிகர் விஜய் போன்றவர்களை எதிர்கொள்ளும் முக்கிய முகமாக உதயநிதியை முன்னிறுத்தப் போகிறது திமுக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in