உதயநிதி அமைச்சரானது வாரிசு அரசியலின் நீட்சியா?

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பதில்
உதயநிதி அமைச்சரானது வாரிசு அரசியலின் நீட்சியா?

திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திமுக ஆட்சிக்கு எதிரான கருத்துகளையும் துளியும் தயக்கமின்றி முன்வைப்பவர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். காமதேனு இணையத்திற்காக அவர் கொடுத்த பிரத்யேகப் பேட்டி இதோ...

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

பாராளுமன்றத் தேர்தலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தயாராகிவிட்டதா?

பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் இப்போது தயாராகித்தான் வருகின்றன. அதைப் போலவே மார்க்சிஸ்ட் கட்சியும் தயாராகி வருகிறது. எங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் கண்டு, பூர்வாங்க பணிகளைத் தொடங்கி இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலத்திற்கு மேல் இருக்கிறது. எங்கள் கொள்கையில் உறுதியோடு இருக்கும் திமுக கூட்டணியில் இருக்கிறோம். இந்தக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் இம்முறை எதை மையப்படுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளீர்கள்?

இந்தியாவின் அரசியலமைப்பையும், நாட்டு மக்களின் ஒற்றுமையையும் பாதுகாப்பது தான் எங்கள் பிரதான பிரச்சாரமாக இருக்கும். அப்படி பாதுகாக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி அரசை வீழ்த்துவதுதான் பிரதான இலக்கு. அந்த ஒற்றை இலக்கை மையப்படுத்தித்தான் எங்கள் தேர்தல் பிரச்சாரம் அமையும். நாடு மிகவும் ஆபத்தான தருணத்தில் இருக்கிறது. பாஜக அரசை வீழ்த்தி, நாட்டு நலனைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதை மையப்படுத்தியே எங்கள் பிரச்சாரம் இருக்கும்.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

மாதம்தோறும் மின் கணக்கீடு என தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில், மின்கட்டண உயர்வும் வந்துவிட்டது. இதையெல்லாம் எதிர்த்து இடதுசாரிகள் வீதிக்குவரவே இல்லையே... கூட்டணி தர்மம் தடுக்கிறதோ?

ஒருபக்கம் மக்கள் பாதிக்கப்படும்போது போராடுவது என்பதுதான் எங்களது அடிப்படையான அணுகுமுறை. அதேநேரத்தில் அவ்வப்போது இருக்கும் அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதானே அதை செய்ய முடியும். பாஜகவை வீழ்த்துகிற பணியில் திமுகவை பயன்படுத்துகிறோம். அந்த இயக்கத்தோடு இணைந்து நிற்கிறோம். அதேநேரத்தில் திமுக செய்யும் இப்படியான மக்கள் நலன் பாதிக்கும் விஷயங்களுக்கு எதிராகவும் அழுத்தமாகக் குரல் கொடுப்பதுடன் அரசாங்கத்திடமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், இதில் இன்னொன்றும் இருக்கிறது. மின்சாரக் கட்டணம், சொத்துவரி ஆகியவற்றின் உயர்வுக்கு திமுக மட்டுமே காரணம் அல்ல. பாஜகவின் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து நிர்பந்தங்களைக் கொடுக்கிறார்கள். நீங்கள் சொத்துவரியை உயர்த்தினால்தான் நாங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பணம் கொடுப்போம் என்கிறார்கள். அதேபோல் மின்கட்டணத்தை உயர்த்தினால்தான் உதய் திட்டத்திற்கு உதவமுடியும் என்கிறார்கள். இந்த நிர்பந்தங்கள் எல்லாம் இருக்கிறது. இதையும் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். என்றாலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களிலும் திமுக கூட்டணியில் இருந்தாலும், நாங்கள் அரசின் தவறுகளையும் அவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம். அதேசமயம் பாஜக என்னும் பேராபத்தை வீழ்த்தும் இலக்கையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டி உள்ளது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

அண்மைக்காலமாக தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடுகளும், குரலும் வலுவாகவே ஒலிக்கிறதே?

மத்தியில் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு தமிழகத்தில் அதிகாரம் மற்றும் பணபலத்தை பயன்படுத்துகிறது பாஜக. ஊடகங்களையும் நிர்பந்தப்படுத்தி அவர்களின் செய்திகளைப் பெரிதாகப் போடவைக்கிறார்கள். அதனால் பாஜக வளர்வது போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் உண்மையியில், நாங்கள் பல்வேறு இயக்கங்கள் நடத்தும்போது, மக்களை சந்திக்கும்போது மத்திய ஆட்சியாளர்களின் மீது மக்களுக்கு கடும் கோபம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதைத் தேர்தல் முடிவில் பாஜகவினரும் உணர்வார்கள்.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் அனைத்து எதிர்கட்சிகளும் கரம் கோக்க வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி மாதிரியான கட்சிகளை காங்கிரஸ் கூட்டணியால் இணைக்கமுடியவில்லையே?

இப்போது இருக்கும் சூழலைப் பாருங்கள்... பாஜகவின் பேராபத்தை உணர்ந்து, அவர்கள் பக்கம் நின்ற கட்சிகளே இந்தப் பக்கம் வந்துவிட்டன. பிஹாரில் நிதிஷ்குமார் அணிமாறி, பாஜக எதிர்ப்பு அணியில் சேர்த்துள்ளார். தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் இப்போது பாஜக எதிர்ப்பு அணியில் சேர்ந்துள்ளது. ஆகவே, நிச்சயமாகத் தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பலகட்சிகள் மதச்சார்பற்ற அணியில் இணையும் என்ற நம்பிக்கை உள்ளது.

‘இந்துத்துவ கோஷம்’ சாமானியர்களையும் வசீகரிப்பதன் நீட்சிதானே பாஜகவின் தொடர்வெற்றி? இது எதிர்க்கட்சிகளுக்கு சவால்தானே?

அனைத்துத் தேர்தல்களிலும் பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக மக்கள் ஓட்டுப்போட்டார்கள் என்று சொல்லிவிடமுடியாது. அண்மையில் கூட இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். டெல்லி மாநகராட்சி் தேர்தலில் பாஜக தோற்றிருக்கிறது. மதச்சார்பற்ற கொள்கைதான் இந்தியாவின் பாரம்பரியக் கலாச்சாரம் என்பதன் சமகாலச் சான்று இவை. ஒரே ஒரு மாநிலமாக குஜராத்தை மட்டும் பாஜக தங்கள் சோதனைக்களமாக மாற்றிவைத்துள்ளனர். அந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு மதவெறியை உசுப்பிவிட முடியுமோ, அவ்வளவு உசுப்பிவிட்டு மக்களை கூறுபோட்டுவைத்துள்ளனர். மற்ற மாநிலங்களை அப்படிச் சொல்லமுடியாது.

உதயநிதி
உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது வாரிசு அரசியலின் நீட்சி எனச் சொல்லப்படுகிறதே?

யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது அந்தக் கட்சியின் உள்விவகாரம். உதயநிதி அந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றுகிறார். அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும், எம்எல்ஏ-வாகவும் இருக்கிறார். அவர் வாரிசாகவே இருந்தாலும் முறைப்படி ஜனநாயகத்தின் வாசல் வழியாக வெற்றிபெற்றே வந்திருக்கிறார். அதை நாம் மறுக்க முடியாது. வாரிசு என்பதற்காகவே பதவிகொடுத்தால் அது வேறு விஷயம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in