
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் என்றால் பயம் எனவும், அதனால்தான் அவர் பேச்சுக்கு பதில் கூற மறுக்கிறார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் நடைபெற்ற திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தேனி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுகவைச் சேர்ந்த 1000 மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10,000க்கான பொற்கிழியை வழங்கினார்.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர் பேசும்போது, ”சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுகவின் வரலாறு பேசப்படும். முதலமைச்சர் ஸ்டாலினின் இரண்டரை ஆண்டு கால சாதனைகள் பேசப்படும். ஆனால் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அந்த இயக்கத்தின் கொள்கை வரலாறு என ஏதும் பேசப்பட்டதா? மாறாக கலை நிகழ்ச்சிகள் தான் நடந்தது. மறுநாள் செய்தித்தாள்களில் புளியோதரை நன்றாக இருந்ததா? சாம்பார் சாதம் நன்றாக இருந்ததா? என்று தான் செய்திகள் வெளியாகின.
நீட் தேர்வை ரத்து செய்ய அரசியல் பாகுபாடு இன்றி அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக அல்ல. மக்களுக்கானது. நீட் தேர்வு ரத்தானால் அதன் ஒட்டுமொத்த பெருமையையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆரியம் திராவிடம் இல்லை என கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, திமுக தலைவர்கள் பலரும் பதில் அளித்து வருகிறார்கள். ஆனால் அண்ணாவையும் திராவிடத்தையும் கட்சியின் பெயராக கொண்ட இயக்கத்தின் தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளிக்க மறுக்கிறார்.
கேட்டால் நான் அறிஞர் இல்லை. அந்த அளவுக்கு படிக்கவில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் என்றால் பயம். அதனால்தான் அவர் பேச்சுக்கு பதில் கூற மறுக்கிறார்.
அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதெல்லாம் நாடகம். கூட்டணி முடிவு அறிவிப்புக்கு மறுநாளே, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்றது எதற்காக? பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி.” என பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!